நெல்லையில் கார் டிரைவரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிய கும்பல் கோர்ட்டில் ஆஜராகி விட்டு வந்தபோது துணிகரம்
நெல்லையில் கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வந்த கார் டிரைவரை கும்பல் ரோட்டில் ஓட ஓட விரட்டிச்சென்று சரமாரியாக வெட்டியது.
நெல்லை,
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 24). இவர் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை சேர்ந்த மதபோதகர் ஜோஸ்வா என்பவரிடம் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் ஜோஸ்வா நெல்லை அருகே உள்ள தாழையூத்து, கங்கைகொண்டான் பகுதியில் இறை பணி செய்து வந்தார். அப்போது கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு வேலை வாங்கி தருவதாக கூறிஉள்ளார். பின்னர் அவரை பல்வேறு இடங்களுக்கு அது தொடர்பாக அழைத்து சென்றுள்ளார். அப்போது அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
இது தொடர்பாக அவர் தாழையூத்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து ஜோஸ்வா மற்றும் கார் டிரைவர் வினோத்குமார் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண் ரெயிலின் குறுக்கே பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதில் தாழையூத்து போலீசார் தொடர்ந்த வழக்கு நெல்லை கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கார் டிரைவர் வினோத்குமார் கோர்ட்டில் ஆஜரானார். பின்னர் சாத்தூருக்கு செல்வதற்காக அவர் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் பஸ்சில் ஏறினார்.
பஸ் நிலையத்தை விட்டு சிறிது தூரம் பஸ் சென்ற போது வினோத்குமார் பின்னால் திரும்பி பார்த்தார். அப்போது ஒரு கும்பல் தன்னை தாக்க வந்திருப்பதை கண்டார்.
அப்போது மேலப்பாளையம் -பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள சிக்னலில் பஸ் நின்றது. உடனடியாக வினோத்குமார் பஸ்சில் இருந்து கீழே குதித்து ஓடினார். இதைக்கண்ட அந்த கும்பல் விரட்டி சென்று அரிவாளால் வெட்டினர்.
இதைக்கண்ட போக்குவரத்து போலீசார் அவர்களை துரத்தினர். அப்போது கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் என்பவர் போலீசாரிடம் சிக்கினார். இதையடுத்து போலீசார் வினோத்குமாரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். நவநீதகிருஷ்ணனை மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இவர் மதபோதகருக்கு ஆதரவாக செயல்பட்ட பூர்ணவல்லி என்பவரை ஏற்கனவே வெட்டி கொலை செய்தவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடுரோட்டில் வாலிபர் ஓடஓட விரட்டி வெட்டப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story