கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையோர தேயிலை தோட்டத்தில் பயங்கர காட்டுத்தீ
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையோர தேயிலை தோட்டத்தில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது.
கோத்தகிரி,
கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் மரம், செடி, கொடிகள் காய்ந்து எளிதில் தீப்பற்றும் நிலையில் உள்ளன. இதனால் ஆங்காங்கே காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. காட்டுத்தீ பரவாமல் தடுக்க வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனினும் வனப்பகுதிகளில் அடிக்கடி காட்டுத்தீ ஏற்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் உள்ள தட்டப்பள்ளம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டத்தில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது.
மேட்டுப்பாளையம் அடிவாரம் முதல் தட்டப்பள்ளம் வரை பல ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த தோட்டத்தில், பயிரிடப்பட்டிருந்த தேயிலை செடிகள் முறையாக பராமரிக்காததால் மரங்கள் போல் வளர்ந்து இருந்தன. வெயிலின் தாக்கத்தில் அவை காய்ந்து இருந்ததாலும், காற்று பலமாக வீசியதாலும் காட்டுத்தீ ஏற்பட்டு மள, மளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது.
காட்டுத்தீ ஏற்பட்ட தேயிலை தோட்டத்தை ஒட்டி வனத்துறைக்கு சொந்தமான வனப்பகுதி உள்ளது. இதனால் தீ அந்த வனப்பகுதிக்குள் பரவாமல் தடுக்க வனத்துறை ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று அதிகாலை வரை எரிந்த காட்டுத்தீ வனப்பகுதிக்குள் பரவாமல் அணைந்தது. எனினும் காட்டுத்தீயில் தனியார் தோட்டத்தில் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த தேயிலை செடிகள் கருகி நாசமாகின. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, சமவெளி பகுதிகளில் இருந்து கோத்தகிரிக்கு வாகனங்களில் வருபவர்கள் புகைபிடித்து விட்டு சிகரெட், பீடி துண்டுகளை அணைக்காமல் சாலையோரங்களில் வீசுவதை தவிர்க்க வேண்டும். இதனால் காட்டுத்தீ ஏற்படுகிறது. இவ்வாறு காட்டுத்தீ ஏற்பட காரணமாக இருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
Related Tags :
Next Story