மேம்பாட்டு பணிகள் நிறைவடைந்தும் பைன்பாரஸ்ட் திறக்காததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் - நுழைவு கட்டணம் உயர்வு
மேம்பாட்டு பணிகள் நிறைவடைந்தும் பைன்பாரஸ்ட் திறக்காததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். மேலும் நுழைவு கட்டணமும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
ஊட்டி,
ஊட்டி தலைகுந்தா அருகே பைன்பாரஸ்ட்(பைன் மரக்காடுகள்) சுற்றுலா தலம் உள்ளது. பசுமையாக வளர்ந்து காணப்படும் பைன் மரங்களுக்கு நடுவே சரிவான இடத்தில் நடப்பது சுற்றுலா பயணிகளை கவருகிறது. அவர்கள் அப்பகுதியை கண்டு ரசிப்பதுடன், புகைப்படம் எடுத்து மகிழ்கிறார்கள். அங்கு மழைக்காலங்களில் கீழே முறிந்து விழுந்த மரங்கள் வெட்டப்பட்டு, சுற்றுலா பயணிகள் அமரும் வகையில் பல்வேறு இருக்கைகளாக மாற்றப்பட்டு உள்ளது.
பைன்பாரஸ்ட்டின் கீழ் பகுதியில் காமராஜ் சாகர் அணையின் இயற்கை எழில் தோற்றத்தை காணலாம். ஊட்டியில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. அப்போது பைன்பாரஸ்ட்டில் சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் பகுதி சேறும், சகதியுமாக மாறியது. இதன் காரணமாக அவர்கள் வழுக்கி கீழே விழும் அபாயம் காணப்பட்டது. இதையடுத்து நீலகிரி மாவட்ட வனத்துறை சார்பில் பைன்பாரஸ்ட்டில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக பைன்பாரஸ்ட் தற்காலிகமாக மூடப்பட்டு, அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அங்கு சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக நடந்து சென்று வரும் வகையில் கற்களை கொண்டு தடுப்புச்சுவர் அமைக் கப்பட்டு, படிக்கட்டு கள் அமைக்கப்பட்டு உள் ளது. மழை காலங்களில் படிக்கட்டுகளில் தண்ணீர் தேங்காத வகையிலும், தண்ணீர் வெளியே செல்லும் வகையிலும் குழாய்கள் பொருத்தப்பட்டன. மேலும் கீழ்பகுதியில், கற்களால் ஆன நடைபாதை அமைக்கப்பட்டது. வளைந்து, நெளிந்து பைன் மரங்களுக்கு மத்தியில் செல்லும் நடைபாதையில் செல்வது சுற்றுலா பயணிகளை வசீகரிக்கிறது.
பைன்பாரஸ்ட் முன்பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளதோடு, சுற்றுலா தலம் குறித்த தகவல் பலகைகள் ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் ஆங்காங்கே வைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த மேம்பாட்டு பணிகள் நிறைவடைந்து பல நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் இதுவரை சுற்றுலா பயணிகளுக்காக பைன்பாரஸ்ட் திறக்கப்படாமல், நுழைவுவாயில் பூட்டு போட்டு மூடப்பட்ட நிலையிலேயே காணப்படுகிறது. அங்கு அறிவிப்பு பலகை எதுவும் வைக்கப்படவில்லை.
கோடை சீசன் தொடங்கியதாலும், சமவெளி பகுதிகளில் வெயில் வாட்டி வதைப்பதாலும் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தருகின்றனர். அவர்கள் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து விட்டு, கூடலூர் சாலையில் உள்ள பைக்காரா படகு இல்லத்துக்கு செல்கின்றனர். அவ்வாறு செல்லும்போது சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்களை பைன்பாரஸ்ட் முன்பு நிறுத்தி இறங்குகின்றனர். ஆனால் சுற்றுலா தலம் மூடப்பட்டு இருப்பதை பார்த்துவிட்டு, அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதை காண முடிகிறது.
இருந்தாலும் அவர்கள் தங்களது குழந்தைகளுடன் செல்பி எடுப்பதோடு, அங்கு குதிரை சவாரி செய்து மகிழ்கின்றனர். மேலும் சிலர் பைன்பாரஸ்ட் ஏன் திறக்கவில்லை என்று ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். எனவே கோடை சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் பைன்பாரஸ்ட் சுற்றுலா தலத்தை விரைவில் திறக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது. இதற்கிடையே ஒரு நபருக்கு நுழைவு கட்டணம் ரூ.5-ல் இருந்து ரூ.10 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. கேமரா ரூ.30, வீடியோ கேமரா ரூ.100 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
Related Tags :
Next Story