ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.41 லட்சம்-2 துப்பாக்கிகள் பறிமுதல்
கோவையில் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.41 லட்சம்-2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை,
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதை தடுக்க பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழுவை சேர்ந்த அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி பறக்கும்படையை சேர்ந்த அதிகாரி ராஜேஸ்வரி தலைமையில் அதிகாரிகள் கோவை சாய்பாபாகாலனி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஜீப்பை தடுத்து நிறுத்தி சோதனை செய் தனர்.
அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. உடனே அதிகாரிகள் அந்த ஜீப்பில் இருந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர். அதில், கோவையை சேர்ந்த சுப்பிரமணி, திருஞானம் என்பதும், ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. அத்துடன் ஒரு வங்கியில் இருந்து ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்ப ரூ.41 லட்சத்தை கொண்டு செல்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஆனால் அவர்களிடம் அந்த பணத்துக்கான ஆவணங்கள் இல்லை. அதுபோன்று அவர்கள் 2 பேரும் வைத்திருந்த துப்பாக்கிகளுக்கு உரிமம் இருந்தும் தேர்தல் நேரத்தில் அவற்றை பயன்படுத்த அனுமதி பெறவில்லை.
இதையடுத்து அதிகாரிகள் அந்த ஜீப்பில் இருந்த ரூ.41 லட்சம் மற்றும் 2 துப்பாக்கிகளை பறிமுதல் செய்து உயர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பந்தப்பட்ட வங்கியை சேர்ந்த ஊழியர்கள் விரைந்து சென்று ரூ.41 லட்சத்துக்கான ஆவணங்களை கொடுத்தனர். இதனால் ரூ.41 லட்சம் வங்கி ஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட 2 துப்பாக்கிகளும், போலீசிடம் ஒப்படைக்கப்பட்டன.
இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘உரிமம் பெற்று துப்பாக்கிகள் வைத்திருந்தாலும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், அந்த துப்பாக்கிளை போலீசிடம் ஒப்படைக்க வேண்டும். ஏ.டி.எம். எந்திரத்தில் நிரப்ப பணம் கொண்டு செல்லும் வாகனங்களில் இருப்பவர்கள் துப்பாக்கிகள் வைத்து இருப்பார்கள். அவர்கள் துப்பாக்கிகளுக்கு உரிமம் இருந்தாலும் தேர்தல் நேரத்தில் பயன்படுத்த கண்டிப்பாக அனுமதி பெற வேண்டும்’ என்றனர்.
இதுபோல் கோவை திருச்சி ரோட்டில் தனியார் பள்ளி அருகில் ஒரு சரக்கு ஆட்டோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பறக்கும் படை அதிகாரி சுப்புலட்சுமி தலைமையில் திடீர் சோதனை நடத்தினார்கள். அந்த ஆட்டோவில் 128 டிராவலர்ஸ் பைகள் இருந்தன.
கோவையில் இருந்து திருப்பூருக்கு இந்த பைகளை கொண்டு செல்வதாக அந்த ஆட்டோவில் இருந்த கணுவாயை சேர்ந்த நபி என்பவர் கூறினார். அதற்கான ஆவணங்கள் இல்லை. இதையடுத்து அதிகாரிகள் அந்த பை களை பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாடாளுமன்ற தேர்தலையொட்டி கோவை மாவட்டத்தில் கடந்த மாதம் 11-ந் தேதி முதல் நேற்று வரை மொத்தம் 9 கோடியே 89 லட்சத்து 2 ஆயிரத்து 932 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அதில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததால் ரூ.3 கோடியே 34 லட்சத்து 89 ஆயிரத்து 725 திரும்ப ஒப்படைக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள தொகை கருவூலத்தில் ஒப்படைத்து உள்ளோம். அதுபோன்று 2123 மதுபாட்டில்கள், 15 கிலோ குட்கா, 2 கிலோ கஞ்சா, 7 துப்பாக்கிகள், 4½ கிலோ நகை, 128 பைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
Related Tags :
Next Story