விழுப்புரத்தில், செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு


விழுப்புரத்தில், செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 11 April 2019 10:45 PM GMT (Updated: 11 April 2019 9:09 PM GMT)

விழுப்புரத்தில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விழுப்புரம், 

விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் உள்ள அசோக் நகர், அக்பர் நகர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு மையப்பகுதியில் தனியார் செல்போன் நிறுவனம் ஒன்று செல்போன் கோபுரம் அமைக்க முடிவு செய்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதற்கான பணிகளை தொடங்கியது.

இதையறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் விரைந்து சென்று, குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் செல்போன் கோபுரம் அமைத்தால் அதிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சு மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறி அந்த பணிகளை தடுத்து நிறுத்தினர்.

மேலும் இதுகுறித்து விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்திலும் பொதுமக்கள் புகார் செய்தனர். புகாரை பெற்ற போலீசார், இதுசம்பந்தமாக செல்போன் நிறுவனத்திடம் பேசி கோபுரம் அமைக்கும் முடிவை கைவிட செய்வதாக கூறினர். ஆனால் இதுநாள் வரையிலும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் அந்த நிறுவனத்தினர் தற்போது செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை மீண்டும் தொடங்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் அமர்ந்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் செல்போன் கோபுரம் அமைக்கக்கூடாது, என்றும் ஏற்கனவே அமைத்த பாகங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனத்திடம் பேசி, கோபுரம் அமைக்கும் முடிவை கைவிட செய்வதாக போலீசார் உறுதியளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் அனைவரும் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தநிலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story