காட்பாடியில், ரூ.11½ கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்: கனரா வங்கி மேலாளரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை முக்கிய ஆவணங்களை எடுத்துச்சென்றனர்


காட்பாடியில், ரூ.11½ கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்: கனரா வங்கி மேலாளரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை முக்கிய ஆவணங்களை எடுத்துச்சென்றனர்
x
தினத்தந்தி 12 April 2019 4:15 AM IST (Updated: 12 April 2019 2:48 AM IST)
t-max-icont-min-icon

காட்பாடி பள்ளிக்குப்பத்தில் ரூ.11 கோடியே 48 லட்சம் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக கனரா வங்கி மேலாளரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் கனரா வங்கியின் பண வைப்பறையிலும் ஆய்வு நடந்தது.

காட்பாடி, 

வேலூர் மாநகராட்சி பகுதி காட்பாடி காந்திநகர் 17-வது கிழக்கு குறுஞ்சாலையில் வசித்து வருபவர் தயாநிதி. இவர் காட்பாடி கனரா வங்கியில் கிளைமேலாளராக பணியாற்றி வருகிறார். அவரது வீட்டிற்கு நேற்று காலை 10 மணியளவில் வருமான வரித்துறை சென்னை உதவி ஆணையர் விஜய் தீபன் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் வந்தனர்.

அவர்கள் வங்கி மேலாளர் தயாநிதியிடம், பள்ளிக்குப்பத்தில் கைப்பற்றப்பட்ட ரூ.11 கோடியே 48 லட்சத்தில் ரூ.200 மற்றும் ரூ.2,000 நோட்டு கட்டுகளில் கனரா வங்கியின் பெயர் மற்றும் சீரியல் எண்கள் இருந்தது குறித்து விசாரித்தனர்.

அந்த பணம் யாருடைய வங்கிக்கணக்கில் இருந்து எடுக்கப்பட்டது? எப்போது எடுக்கப்பட்டது? ஒரே தொகையாக எடுக்கப்பட்டதா? அல்லது சிறுக, சிறுக எடுத்து செல்லப்பட்டதா? என துருவி, துருவி கேள்வி கேட்டனர்.

மேலும் தேர்தல் சமயத்தில் வங்கியில் இருந்து அதிகளவு பணம் எடுத்தால், அந்த நபர் குறித்து தேர்தல் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே அந்த பணத்தை எடுத்துச் சென்றது யார்? நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் வங்கியில் இருந்து பணம் எடுக்கப்பட்டதா? அல்லது அதற்கு முன்பாக எடுக்கப்பட்டதா? என விசாரித்தனர். இந்த பண விவகாரத்தில் தனக்கு எதுவும் தெரியாது என்று தயாநிதி தெரிவித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர் அவரது வீட்டில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்தனர். இந்த விசாரணை இரவு 7 மணிக்கு முடிந்தது. அதன்பின் வருமான வரித்துறை அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.

இதேபோன்று காட்பாடி ஓடைப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள கனரா வங்கியின் பணம் வைப்பு அறையில் காலை 10 மணியளவில் 15 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சென்று, ஆய்வில் ஈடுபட்டனர். அங்கிருந்து மாவட்டம் முழுவதும் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளின் சீரியல் எண்கள் குறித்தும், அவை அனுப்பப்பட்ட காலம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.

கடந்த ஒரு மாதமாக காட்பாடியை சுற்றியுள்ள ஏ.டி.எம். மற்றும் வங்கிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட ரூபாய் நோட்டுகள் குறித்து அங்கிருந்த ஆவணங்களை வைத்து சரிபார்த்தனர். ஒரே நாளில் லட்சக்கணக்கிலோ, கோடிக்கணக்கிலோ காட்பாடி பகுதியில் கனரா வங்கியின் எந்த கிளைக்கு அனுப்பி வைக்கப்பட்டது என ஆராய்ந்தனர். அங்கிருந்த ஆவணங்கள் மூலம் வங்கியின் உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. சுமார் 11 மணி நேரம் நடந்த இந்த ஆய்வு இரவு 9 மணியளவில் நிறைவடைந்தது. சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றனர்.

விசாரணை மற்றும் ஆய்வு குறித்து எவ்வித தகவல்களையும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட்டனர். அதிகாரிகள் காட்பாடி கனரா வங்கி கிளை மேலாளரிடம் நடத்திய விசாரணையும், வங்கி பணம் வைப்பறையில் நடத்திய ஆய்வும் காட்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story