ஈரோடு மாவட்டத்தில் போலீசார் தபால் ஓட்டு பதிவு செய்தனர் கலெக்டர் சி.கதிரவன் பார்வையிட்டார்
ஈரோடு மாவட்டத்தில் போலீசார் தபால் ஓட்டு போடும் மையத்தை கலெக்டர் சி.கதிரவன் பார்வையிட்டார்.
ஈரோடு,
தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலின் போது வாக்குச்சாவடி பணி மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர், அரசு ஊழியர்கள், போலீசார், வனத்துறையினர் உள்ளிட்டவர்களுக்கு தபால் ஓட்டுகள் அனுமதிக்கப்பட்டு உள்ளன.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் தபால் ஓட்டுகளை பதிவு செய்ய துறைவாரியாக மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. முதல் கட்டமாக கடந்த 7-ந் தேதி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான வாக்குச்சாவடி பயிற்சியின் போது தபால் ஓட்டுகள் பதிவு தொடங்கியது. அதைத்தொடர்ந்து நேற்று தேர்தல் பணியில் ஈடுபட உள்ள போலீசார், முன்னாள் படைவீரர்கள், ஊர்க்காவல் படையினர், ஓய்வு பெற்ற தீயணைப்பு வீரர்கள், வனத்துறையினர் தபால் ஓட்டுகள் போட திண்டல் வேளாளர் மெட்ரிக் மகளிர் பள்ளிக்கூடத்தில் வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டு இருந்தது.
இங்கு ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அனைத்து பகுதிகளில் இருந்தும் ஆண்-பெண் போலீசார், வனத்துறையினர், தேர்தல் பணியில் ஈடுபடும் ஊர்க்காவல் படையினர், முன்னாள் படைவீரர்கள், தீயணைப்பு வீரர்கள் தங்கள் ஓட்டுகளை பதிவு செய்தனர்.
போலீசார் தங்கள் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் காவல்துறை அடையாள அட்டைகளை காண்பித்து தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பதை உறுதி செய்தனர். பின்னர் அவர்களுக்கு வழங்கப்பட்ட தபால் ஓட்டுச்சீட்டில் கேட்கப்பட்ட விவரங்களை பூர்த்தி செய்து, தகுதியான அதிகாரிகளிடம் கையொப்பம் பெற்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். பின்னர், அந்த வாக்குச்சீட்டுகள் அதற்குரிய பெட்டிகளில் போடப்பட்டது.
போலீசார் தபால் ஓட்டுகள் போடும் மையத்தை ஈரோடு மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சி.கதிரவன் பார்வையிட்டார்.
அவருடன் ஈரோடு மாவட்ட வருவாய் அதிகாரி ச.கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மு.பாலகணேஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தினேஷ், தேர்தல் பிரிவு தாசில்தார் ரவிச்சந்திரன் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் 1,400 போலீசார், முன்னாள் படைவீரர்கள், ஊர்க்காவல் படையினர், ஓய்வு பெற்ற வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் 295 பேர் என மொத்தம் 1,695 பேருக்கு தபால் வாக்குகள் உள்ளன.
நேற்று வாக்குப்பதிவு செய்ய தவறியவர்கள் நாளை (சனிக்கிழமை) தங்கள் வாக்குகளை பதிவுசெய்து தபால் வாக்குப்பெட்டியில் போடலாம் என்று கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.
மேலும், தபால் ஓட்டுகள் பெற்று உள்ள அனைவரும் தங்கள் வாக்குகளை 100 சதவீதம் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டு உள்ளார்.
Related Tags :
Next Story