நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுப்போட மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு தனி வரிசை


நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுப்போட மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு தனி வரிசை
x
தினத்தந்தி 12 April 2019 4:00 AM IST (Updated: 12 April 2019 3:21 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டுப்போட மாற்றுத்திறனாளிகள், முதியவர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.

ஈரோடு, 

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது. 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி தேர்தல் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் எளிதாக ஓட்டு போடும் வகையில் தனி வரிசை ஏற்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியானதும், பல்வேறு வகையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ஊர்வலம், பல்வேறு போட்டிகள் என பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளின் மாணவ-மாணவிகள் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

முதியவர்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் நலன் கருதி வாக்குச்சாவடி மையங்களில் வரிசையில் நிற்காமல் நேரடியாக சென்று வாக்குப்பதிவு செய்வதற்காக தனி வரிசை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. எனவே அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு என பிரத்யேக வரிசையும், பாலூட்டும் தாய்மார்கள், முதியவர்கள் ஆகியோருக்கு தனி வரிசையும், பொதுமக்களுக்கு ஒரு வரிசையும் என மொத்தம் 3 வரிசைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

அனைத்து வாக்காளர்களும் வருகிற 18-ந் தேதி எந்தவித சிரமமும் இல்லாமல் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து இருந்தார்.

Next Story