மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் வாக்களிக்க வசதியாக சக்கர நாற்காலிகள் தயார்
மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் வாக்களிக்க வசதியாக சக்கர நாற்காலிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது. பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 1,692 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் பொள்ளாச்சி சட்டசபை தொகுதியில் 269, வால்பாறை தொகுதியில் 235 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த நிலையில் பொள்ளாச்சி வாக்குச்சாவடிகளுக்கு தேவையான சக்கர நாற்காலிகள் சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டன. அந்த நாற்காலிகளை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி ரவிக்குமார் பார்வையிட்டார். மேலும் அவர் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து அவற்றை ஆய்வு செய்தார். அப்போது வருவாய் துறையினர் உள்பட பலர் உடன் இருந்தனர்.
இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-
பொள்ளாச்சி சட்டசபை தொகுதியில் 269 வாக்குச்சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு சக்கர நாற்காலிகள் வழங்கப்படுகின்றது. தற்போது புதிதாக 75 சக்கர நாற்காலிகள் கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் உள்ளன. கடந்த தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட 80 சக்கர நாற்காலிகள் உள்ளன. மீதமுள்ள சக்கர நாற்காலிகள் விரைவில் கொண்டு வரப்படும். வாக்குப்பதிவிற்கு ஒரு நாளைக்கு முன்பாக அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப் படும். மாற்றுத்திறனாளி வாக்காளர்களை அழைத்து வரும் உறவினர்கள், பூத் ஏஜெண்டுகள் வாக்குச்சாவடிக்கு உள்ளே செல்ல அனுமதி இல்லை. அங்கு பணியில் இருக்கும் அலுவலர்கள் சக்கர நாற்காலியில் அவர்களை உட்கார வைத்து அழைத்து செல்வார்கள்.
தற்போது புதிதாக கொண்டு வரப்பட்டு உள்ள சக்கர நாற்காலிகள் நன்றாக உள்ளது. நாற்காலியை மாற்றுத்திறனாளிகளே நிறுத்தி கொள்ள பிரேக் வசதியும் உள்ளது. இதை தவிர வாக்குச்சாவடிக்கு மாற்றுத்திறனாளிகள் சென்று வருவதற்கு வசதியாக சாய்வுதளம் அமைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story