தேனியில் மோடி பங்கேற்கும் கூட்டம் தேர்தல் வெற்றியின் அச்சாரமாக அமையும் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
தேனியில் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டம் தேர்தல் வெற்றியின் அச்சாரமாக அமையும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மதுரை,
தேனி நாடாளுமன்ற வேட்பாளர் ரவீந்திரநாத்குமாரை ஆதரித்து பிரதமர் மோடி நாளை (சனிக்கிழமை) தேனி கூட்டத்தில் பிரசாரம் செய்கிறார். இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். கூட்டத்தில் ஏறத்தாழ 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர். மோடி பங்கேற்கும் இந்த கூட்டத்தின் மூலம் தென் தமிழகம் எழுச்சி பெறும். இந்த கூட்டம் வெற்றிக்கு அச்சாரமாக அமையும். வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றால் மத்திய மந்திரிசபையில் அங்கம் வகிப்பார்.
இன்றைய களத்தில் துரோகிகளும், விரோதிகளும் போட்டியிடுகின்றனர். அவர்கள் தங்களின் சுயநலம் ஒன்றைதான் முக்கியமாக கருதுபவர்கள். மக்களை பற்றி கவலைபடமாட்டார்கள். கடந்த 2 ஆண்டுகளில் ஏறத்தாழ 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டங்களை எதிர்க்கட்சியினர் செய்துள்ளனர். அதையெல்லாம் முறியடித்து மக்கள் நலம் சார்ந்த திட்டங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. ஆண்டிற்கு 70 ஆயிரம் கோடிக்கு மேல் சமூகநல பாதுகாப்பு திட்டம் மற்றும் மானியத்திட்டங்களுக்கு அரசு நிதி ஒதுக்கி வருகிறது.
இதுபோன்று எந்த மாநிலத்திலும் திட்டங்கள் வழங்கப் படவில்லை. எனவே தான் ஸ்டாலின், ஆட்சியை பற்றி குறை கூற முடியாமல் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மீது தனிநபர் தாக்குதலாக பேசி வருகிறார். அவர்களுக்கு தைரியம் இருந்தால் இந்த ஆட்சியில் குறை உள்ளது என்று சுட்டிக்காட்ட முடியுமா? ஸ்டாலின் விமர்சனத்திற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story