அ.ம.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் மக்களை தேடி வந்து குறைகளை நிவர்த்தி செய்வார்கள் - நடிகை சி.ஆர்.சரஸ்வதி பிரசாரம்


அ.ம.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் மக்களை தேடி வந்து குறைகளை நிவர்த்தி செய்வார்கள் - நடிகை சி.ஆர்.சரஸ்வதி பிரசாரம்
x
தினத்தந்தி 11 April 2019 10:55 PM GMT (Updated: 11 April 2019 10:55 PM GMT)

அ.ம.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் மக்களை தேடி வந்து குறைகளை நிவர்த்தி செய்வார்கள் என்று நடிகை சி.ஆர்.சரஸ்வதி பேசினார்.

மானாமதுரை, 

மானாமதுரை பழைய பஸ்நிலையத்தில் அ.ம.மு.க. சார்பில் மானாமதுரை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மாரியப்பன் கென்னடி மற்றும் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தேர்போகிபாண்டி ஆகியோரை ஆதரித்து நடிகையும், அ.ம.மு.க. கட்சியின் செய்தி தொடர்பாளருமான சி.ஆர்.சரஸ்வதி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:- இந்த இடைத்தேர்தல் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் நம்பிக்கை துரோகத்தினால் வந்த தேர்தல். இந்த ஆட்சியை காப்பாற்றியதற்கு 18 எம்.எல்.ஏக்களும் பதவி இழந்தனர். டி.டி.வி. தினகரன் கட்சியில் இருந்து வெளியேற 18 எம்.எல்.ஏக்களுக்கும் தலா 50 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டது.

அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க.விற்கு ரூ.500 கோடியும் பேரம் பேசப்பட்டது. அதனால் கூட்டணி முடிவு செய்யப்பட்டது. தே.மு.தி.க. கட்சியினர் முதலில் தி.மு.க.வுக்கு தூது விட்டனர். அங்கு கதவுகள் சாத்தப்பட்டன. கொடுப்பதற்கு எதுவும் இல்லை என்று கூறியதால், அ.தி.மு.க. கூட்டணியில் வந்து அங்கு ரூ.200 கோடி பேரம் பேசி முடிவு செய்யப்பட்டது.

இதே போல் இங்கு காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிற்கும் கார்த்தி சிதம்பரம் மக்கள் பிரச்சினை கேட்காமல், அவர் டி.வி. சீரியல் பார்ப்பதற்கு கேபிள் கட்டணத்தை குறைப்பேன் என்கிறார். இவரை தேர்வு செய்தால் என்ன ஆகும்? லண்டனை தான் சுற்றி கொண்டு இருப்பார். இவர் சாதாரண மக்களை எல்லாம் பார்க்க மாட்டார்.

அதே நேரம் ப.சிதம்பரத்தை பற்றி கூறவே வேண்டாம். அவரால் சிவகங்கை மாவட்டத்திற்கு ஒரு நன்மையும் இல்லை. எச்.ராஜாவை பற்றி அனைவருக்கும் தெரியும், அதுபற்றி சொல்ல வேண்டியதில்லை.

ஆனால் அ.ம.மு.க. சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்கள் நம்பிக்கை வேட்பாளர்கள்.

இங்கு நிற்கும் நாடாளுமன்ற வேட்பாளர் தேர்போகி பாண்டி, சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் மாரியப்பன் கென்னடி ஆகியோர் வெற்றி பெற்றால், அவர்கள் மக்களை தேடி வந்து, குறைகளை கேட்டு, அதை உடனே நிவர்த்தி செய்து வைப்பார்கள்.

அதனால் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story