காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருகிறது - பிரசாரத்தில் எச்.ராஜா குற்றச்சாட்டு
காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருவதாக பிரசாரத்தின் போது பா.ஜ.க. சிவகங்கை தொகுதி வேட்பாளர் எச்.ராஜா குற்றம் சாட்டினார்.
கல்லல்,
காளையார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட சடையன்பட்டி, ஆலவிளாம்பட்டி, சொக்கநாதபுரம், சிலந்தன்குடி, பாகனேரி, காடனேரி, வீழனேரி, கண்டுப்பட்டி, கொல்லங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர் எச்.ராஜா பொதுமக்களிடம் ஆதரவு திரட்டி வாக்கு சேகரித்து பேசியதாவது:- இந்தியாவில் மீண்டும் பா.ஜ.க. வெற்றி பெற்று, பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் புதிய அரசு அமையும்.
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும். தற்போது ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு உள்ளது. இந்த வழக்கில் இருந்து தன்னை பாதுகாத்து கொள்வதற்காக ப.சிதம்பரம் தன்னுடைய மகனை இந்த தேர்தலில் களம் இறக்கி உள்ளார். சிவகங்கை தொகுதி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது அவர்களின் நோக்கம் அல்ல.
இந்த தொகுதியில் எப்படியாவது வெற்றி பெற்று தன்னுடைய குடும்பத்தை வழக்குகள் பிடியில் இருந்து காப்பாற்றிக் கொள்வதற்கு ப.சிதம்பரம் குடும்பத்தினர் எண்ணியுள்ளனர். இதற்கு தி.மு.கவும் கூட்டாக உள்ளது. அதற்கு இந்த தொகுதி மக்கள் இடம் கொடுக்க கூடாது. ப.சிதம்பரம் ஒவ்வொரு பகுதியில் ஆதரவு திரட்டும் போது எனது மகனை டெல்லிக்கு அனுப்புங்கள் என்று கூறி வருகிறார்.
ஆனால் நாடாளுமன்றத்திற்கு அல்ல. ஏற்கனவே பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு அனைவருக்கும் வங்கி கணக்கு, இலவச கியாஸ் இணைப்பு, இலவச வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான திட்டங்களை செய்துள்ளது. ஆனால் இது குறித்து காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.
கடந்த தேர்தலின் போது பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலைத் திட்டம் நிறுத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சியினர் பொய் பிரசாரம் செய்தனர். கடந்த 60 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மக்களை ஏமாற்றும் வேலையை மட்டும் தான் செய்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். இதில் அமைச்சர் பாஸ்கரன், முன்னாள் எம்.பி உடையப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story