விருத்தாசலத்தில் பெண் கொலை, டிரைவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை - கடலூர் மகளிர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு


விருத்தாசலத்தில் பெண் கொலை, டிரைவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை - கடலூர் மகளிர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
x
தினத்தந்தி 12 April 2019 5:10 AM IST (Updated: 12 April 2019 5:10 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் பெண் கொலை வழக்கில் மினி லாரி டிரைவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது.

கடலூர்,

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் செல்வராஜ் நகரை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி சித்ரா(வயது 36). இவர்களுக்கு வினிதா, சிவரஞ்சனி என்ற 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் வினிதா, சிவரஞ்சனி இருவரையும் அதே பகுதியை சேர்ந்த அருள்தாஸ் மகன் மினிலாரி டிரைவர் பிரகாஷ்(27) கேலி, கிண்டல் செய்வது, வயல் வெளிக்கு செல்லும்போது மறைந்து இருந்து பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இதை அறிந்த சித்ரா, பிரகாசை கண்டித்தார். இதனால் அவர் மீது பிரகாஷ் முன்விரோதத்துடன் இருந்து வந்தார்.

கடந்த 16-1-2017 அன்று இரவு 7.30 மணியளவில் வீட்டில் இருந்து சித்ரா வெளியே வந்தார். அப்போது அங்கு வந்த பிரகாஷ், கத்தியால் சித்ராவை சரமாரியாக குத்தினார். இதில் வலி தாங்க முடியாமல் அவர் கத்தினார். இந்த சத்தத்தை கேட்டு ஓடோடி வந்த அவரது மகள் வினிதா, இவரது கணவர் பாண்டித்துரை(25) ஆகியோரையும் பிரகாஷ் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடி விட்டார்.

இதில் படுகாயம் அடைந்த சித்ரா உள்ளிட்ட 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சையில் இருந்த போது சித்ரா போலீசில் வாக்குமூலம் கொடுத்தார். இந்த நிலையில் கடந்த 20-1-2017 அன்று சிகிச்சை பலன் இன்றி சித்ரா பரிதாபமாக இறந்தார். வினிதாவும், பாண்டித்துரையும் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து பிரகாசை கைது செய்தனர்.

இந்த வழக்கு கடலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி லிங்கேஸ்வரன் நேற்று தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், குற்றவாளி பிரகாசுக்கு சித்ராவை கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 2 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், பாண்டித்துரையை கொலை செய்ய முயன்ற குற்றத்துக்காக ஆயுள்தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும், வினிதாவை கொலை செய்ய முயன்றதற்காக 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 2 ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து பிரகாசை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செல்வபிரியா ஆஜர் ஆனார். 

Next Story