பெரிய ஆஸ்பத்திரியில் மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாடு - நோயாளிகள் தவிப்பு
மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர். கூடுதல் விலை கொடுத்து மருந்து, மாத்திரைகளை வெளியில் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மதுரை,
மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதுதவிர ஏராளமானவர்கள் உள்நோயாளிகளாகவும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆஸ்பத்திரியில் வெளிநோயாளிகள், உள்நோயாளிகள் அனைவருக்கும் டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகள் ஆஸ்பத்திரியிலேயே இலவசமாக வழங்கப்படுகின்றன. இதற்காக வெளிநோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் வினியோகிக்கும் பிரதான பிரிவு, நீரிழிவு சிகிச்சை பிரிவு, இருதய பிரிவு, மகப்பேறு பிரிவு, குழந்தைகள் சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, கண் சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தனி மருந்தகங்களும் உள்ளன. அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நோயாளிகளுக்கு, அறுவை சிகிச்சைக்கு பின்னர், உள்நோயாளிகள் பிரிவில் வைத்தே செவிலியர்களால் மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது.
மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு, அரசின் மூலம் கடந்த 2 மாதங்களாக மருந்து, மாத்திரைகள் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படு கிறது. உயிர்காக்கும் மருந்துகள் உள்பட பெரும்பாலான மருந்து, மாத்திரைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இங்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர். அவர்கள் தங்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை வெளியில் கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி ஒரு சில மருந்துகள் கிடைக்காமலும் தவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக டாக்டர்கள் கூறும்போது, “மருத்துவமனையில் உயிர் காக்கும் மருந்துகள் இருப்பில் இல்லாதது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சர்க்கரை நோய், இருதய நோய் உள்ளிட்ட பல நோய்களுக்கு வழங்கப்படும் மாத்திரைகள், சத்து மாத்திரைகள் மட்டுமின்றி ஊசி மருந்து மற்றும் குளுக்கோஸ் ஏற்ற உதவும் உபகரணங்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில மருந்துகளின் தட்டுப்பாட்டை நீக்க மருத்துவமனை முதல்வர் நிதியில் இருந்து உள்ளூர் கொள்முதல் முறையில் தினசரி ரூ.50 ஆயிரத்திற்கு மருந்துகள் வாங்கப்படுகிறது. இதன் மூலம் சிறிய அளவில் மட்டுமே தட்டுப்பாட்டை போக்கமுடியும். தேனி, சிவகங்கை போன்ற சிறிய மருத்துவமனைகளுக்கு இந்த நிதி போதுமானது. ஆனால், மதுரை போன்ற பெரிய மருத்துவமனைக்கு இந்த நிதி போதாதது. அதன் காரணமாக தான் மருந்து தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. மருந்து, மாத்திரைகளுக்கு அரசு போதிய நிதி ஒதுக்காததால் தான் இதுபோன்ற தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டாக்டர்கள் எழுதி கொடுக்கும் மருந்துகள், ஆஸ்பத்திரியில் இல்லாமல் இருப்பதால், டாக்டர்கள் சரியாக வேலை செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. விரைவில் மருந்து தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இதுகுறித்து டீன் வனிதாவிடம் கேட்டபோது, “கடந்த 2 மாதங்களாக மருந்து, மாத்திரைகளின் தட்டுப்பாடு இருந்தது. அவற்றை சமாளிக்கும் வகையில் சில முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்தநிலையில், அரசிடம் இருந்து மருந்து, மாத்திரைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது. இதன் மூலம் இன்னும் இரு தினங்களில் மருந்து, மாத்திரைகளின் தட்டுப்பாடு முழுமையாக நீங்கி விடும். அதன்பின்னர் அனைவருக்கும் மாத்திரைகள் சீராக வினியோகிக்கப்படும். தேவை அதிகமாக இருப்பதே இந்த தட்டுப்பாட்டிற்கு காரணம். இனி இதுபோன்ற நிலை ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்“ என்றார்.
Related Tags :
Next Story