மோடி மீண்டும் பிரதமரானால் அரசியலைவிட்டு விலகுவேன் : மந்திரி எச்.டி.ரேவண்ணா சொல்கிறார்
எண்கணித ஜோதிடப்படி மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமையும் என்றும், மோடி மீண்டும் பிரதமரானால் அரசியலை விட்டு விலகுவேன் என்றும் மந்திரி எச்.டி.ரேவண்ணா கூறியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக பொதுப்பணித்துறை மந்திரியும், முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகனுமான எச்.டி.ரேவண்ணா ஜோதிடத்தில் மிக அதீத நம்பிக்கை கொண்டவர். ஜோதிடம் பார்க்காமல் எந்தவொரு திட்டத்தையும் அவர் தொடங்கமாட்டார். ஒருமுறை ஜோதிடர் கூறினார் என்பதற்காக, கர்நாடக சட்டசபை கூட்டத்திற்கு ஹாசனில் இருந்து தினமும் 200 கிலோ மீட்டர் தூரம் காரில் பயணித்து வந்து சென்றது உண்டு. இது பல்ேவறு விவாதங்களுக்கும் வழி வகுத்தது.
எச்.டி.ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் ரேவண்ணா ஹாசன் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் மைசூருவில் எச்.டி.ரேவண்ணா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலில், நான் கணித்த எண் கணிதஜோதிடப்படி, மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு (காங்கிரஸ்) கூட்டணி மீண்டும் ஆட்சி அமையும். ஒருவேளை மோடி மீண்டும் பிரதமரானால் அரசியலை விட்டு விலகுவேன்.
மோடி கர்நாடகத்தையும், நாட்டையும் ஏமாற்றிவிட்டார். இந்த நாட்டின் வளர்ச்சியில் மோடியின் பங்கு என்ன?. எழுதி வைத்துக்கொள்ளுங்கள், மோடி வெற்றி பெற முடியாது. கர்நாடகத்தில் முதல்கட்ட தேர்தல் வருகிற 18-ந் தேதி நடக்கிறது.
‘18’ எண் குறித்து உங்களுக்கு தெரியாது. கர்நாடக சட்டமன்ற தேர்தல் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்றது. அதிலும் 18 எண் இடம் பெற்றுள்ளது. 18 என்பது 8+1 ஆகும். 8-யும், 1-யும் கூட்டினால் 9 ஆகும்.
இந்த எண் கணிதப்படி பார்த்தால் மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைவது உறுதி. 2-வது கட்ட தேர்தல் 23-ந் தேதி நடக்கிறது. அது தனி விஷயம். அனைவரும் திருடர்கள். அவர்களை அழிக்க வேண்டியுள்ளது. அதனால் ஹாசனில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் நான் கைகளில் சில எலுமிச்சை பழத்தை வைத்திருந்தேன்.
அது பலன் அளிப்பதால் தான் நான் கைகளில் வைத்தேன். அதனால் பயன் இல்லாவிட்டால், நான் எதற்காக அந்த பழங்களை கைகளில் வைத்துக்கொள்ள வேண்டும்?. எடியூரப்பா, ஆர்.அசோக் ஆகியோரும் தங்களின் கைகளில் எலுமிச்சை பழங்களை வைத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு எச்.டி.ரேவண்ணா கூறினார்.
Related Tags :
Next Story