நமது நாட்டுக்கு மாற்று அரசியல் தேவை : நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டி
நமது நாட்டுக்கு மாற்று அரசியல் தேவை என்றும், மோடி மீண்டும் பிரதமராகக் கூடாது என்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் கூறினார்.
பெங்களூரு,
நடிகர் பிரகாஷ்ராஜ் மத்திய பெங்களூரு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவர் நேற்று பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் எந்த விஷயத்தை பற்றியும் கேள்வி கேட்பது கடினம் என்ற நிலை தான் நிலவுகிறது. தேர்தல் என்பது ஒரு நிகழ்வாக மாறிவிட்டது. நமது நாட்டுக்கு மாற்று அரசியல் தேவை. ஒரு கட்சி, இன்னொரு கட்சிக்கு மாற்று கிடையாது.
சாதி, பணம் ஆகியவற்றின் அடிப்படையில் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்கின்றன. ஏழைகள், குடிசைவாழ் மக்களின் ஓட்டுகளை விலைக்கு வாங்கி வெற்றி பெறும் அரசியல் தான் நடக்கிறது. மாற்று அரசியலுக்கு கர்நாடகம் தயாராகி வருகிறது.
நான் பிறந்து வளர்ந்தது, மத்திய பெங்களூருவில் தான். அதனால் தான் நான் இங்கு போட்டியிடுகிறேன். பெங்களூரு ஒரு மினி இந்தியா. பெங்களூருவில் 16 ஆயிரம் பஸ்கள் ஓட வேண்டும். ஆனால் தற்போது 6,000 பஸ்கள் தான் ஓடுகிறது.
நகரில் 50 சதவீத மக்கள் இன்றும், பஸ்களை நம்பி தான் உள்ளனர். காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிகளுக்கு எதிராக நான் போராடவில்லை. குடிநீர், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியது அவசியம். அதை அரசியல் கட்சிகள் சரியாக செய்யவில்லை.
காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகள் சரியானதாக இல்லை. வேலை வாய்ப்புகளை உருவாக்குவது என்றால், பணம் கொடுப்பது அல்ல. வேலை என்றால், அது வாழ்க்கை முறை.
தேசிய கட்சிகளுக்கு தொலைநோக்கு பார்வை இல்லை. விவசாய கடனை தள்ளுபடி செய்கிறார்கள். ஒவ்வொரு முறையும் இதை செய்கிறார்கள். இதனால் என்ன பயன்?. எந்த தொலைநோக்கு பார்வையும் இல்லாமல் பெங்களூரு வளர்கிறது. 250 ஏரிகள் இருந்த நகரில் இன்று 50 ஏரிகள் தான் உள்ளது.
டெண்டர் சூர் திட்டத்தில் சிமெண்டு சாலைகள் அமைக்கப்படுகின்றன. இவ்வாறு செய்தால், மழை நீர் எப்படி பூமிக்குள் செல்லும். ஒவ்வொரு கட்டிடத்திலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி இருக்க வேண்டும். அவ்வாறு செய்தால் தான் மழைநீரை சேமிக்க முடியும். மத்திய பெங்களூரு தொகுதியில் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறேன். அந்த தொகுதியில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. நான் தனி ஒருவன் கிடையாது.
எனக்கு ஆம் ஆத்மி, கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் ஆதரவு உள்ளது. மோடி மீண்டும் பிரதமராகக்கூடாது என்பது எனது விருப்பம்.
இவ்வாறு பிரகாஷ்ராஜ் கூறினார்.
Related Tags :
Next Story