வேட்டவலத்தில் எரிந்த நிலையில் பள்ளி மாணவன் உடல் மீட்பு கொலை செய்யப்பட்டாரா? போலீஸ் விசாரணை


வேட்டவலத்தில் எரிந்த நிலையில் பள்ளி மாணவன் உடல் மீட்பு கொலை செய்யப்பட்டாரா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 13 April 2019 4:15 AM IST (Updated: 12 April 2019 10:43 PM IST)
t-max-icont-min-icon

வேட்டவலத்தில் எரிந்த நிலையில் பள்ளி மாணவன் உடல் மீட்கப்பட்டது. எனவே அவர் தீ வைத்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வேட்டவலம்,

வேட்டவலத்தை அடுத்த ஆவூர் ஏரிக்கரையோரத்தில் நேற்று காலை 13 வயது மதிக்கத்தக்க சிறுவனின் உடல் எரிந்த நிலையில் கிடந்துள்ளது. இதுகுறித்து வேட்டவலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி, துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் நந்தகோபால், கருணாநிதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று எரிந்த நிலையில் கிடந்த சிறுவனின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதையடுத்து போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது ஆனால் யாரையும் ‘கவ்வி’ பிடிக்கவில்லை.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், எரிந்த நிலையில் பிணமாக கிடந்த சிறுவன் ஆவூரை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் செல்வம் (வயது 13) என்பதும், 8-ம் வகுப்பு படித்து வந்ததும் தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்வம் எரித்துக்கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story