விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் வெற்றிபெற தீவிர களப்பணியாற்ற வேண்டும் - தே.மு.தி.க. தொண்டர்களுக்கு மாவட்ட செயலாளர் வேண்டுகோள்


விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் வெற்றிபெற தீவிர களப்பணியாற்ற வேண்டும் - தே.மு.தி.க. தொண்டர்களுக்கு மாவட்ட செயலாளர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 12 April 2019 11:00 PM GMT (Updated: 12 April 2019 6:12 PM GMT)

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற தீவிர களப்பணியாற்ற வேண்டும் என்று தே.மு.தி.க. தொண்டர்களுக்கு மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விழுப்புரம்,

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் கணபதி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் தயாநிதி, மாநில விஜயகாந்த் மன்ற செயலாளர் ராஜசந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காணை ஒன்றிய செயலாளர் குமார் வரவேற்றார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசன் கலந்துகொண்டு பேசியதாவது:-

நமது கூட்டணி வெற்றி கூட்டணி. 40 தொகுதிகளிலும் வென்றெடுக்கும். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. தொண்டர்கள் நிறைந்த கூட்டணி நமது கூட்டணி. நமது வாக்குகளையும், குடும்ப மற்றும் உறவினர்களின் வாக்குகளையும் சிந்தாமல், சிதறாமல் அப்படியே போட்டால் 2½ லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளரை வெற்றி பெற வைக்க முடியும்.

நாம் கூட்டணி தர்மத்தை கடைபிடிப்பவர்கள். தலைவர் விஜயகாந்தின் எண்ணமும் அதுதான். நமக்கு யார்தான் துரோகம் செய்யவில்லை. நமக்கு நல்லதையே செய்யாவிட்டாலும் நம்மை நம்பி வந்தவர்களை கைவிடக்கூாது. இந்த தேர்தல் நமக்கு மட்டுமல்ல அ.தி.மு.க., பா.ம.க.வுக்கும் வாழ்வா, சாவா? தேர்தல். எனவே நமக்குள் இருக்கிற சிறு, சிறு மனக்கசப்புகள், கருத்து வேறுபாடுகளை தூக்கியெறிந்துவிட்டு அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு 2011 தேர்தலைப்போல் மிகவும் தீவிரமாக களப்பணியாற்றி விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் புருஷோத்தமன், வெங்கடேசன், சூடாமணி, குழந்தைவேல், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயசீலன், முருகன், சிவா உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகர செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.

Next Story