கூடலூரில் வறட்சி, பச்சை தேயிலை மகசூல் பாதிப்பு - தொழிலாளர்கள் வேலையிழப்பு


கூடலூரில் வறட்சி, பச்சை தேயிலை மகசூல் பாதிப்பு - தொழிலாளர்கள் வேலையிழப்பு
x
தினத்தந்தி 13 April 2019 4:30 AM IST (Updated: 12 April 2019 11:42 PM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் வறட்சி காரணமாக பச்சை தேயிலை மகசூல் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. சராசரியாக 80 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை உணர முடிகிறது. இதன் காரணமாக அனைத்து நீர்நிலைகளும் வறண்டு விட்டன. வறட்சியின் தாக்கம் நாளுக்குநாள் அதிகமாகி வருவதால், நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. மேலும் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் கோடை வறட்சியால் பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளது. நிலம் ஈரத்தன்மை இல்லாமல் வறண்டு விட்டதால் பச்சை தேயிலை மகசூல் குறைந்து வருகிறது. வழக்கமாக மழைக்காலங்களில் தேயிலை தொழிற்சாலைகளுக்கு தினமும் தலா 40 ஆயிரம் கிலோ பச்சை தேயிலை வரத்து இருக்கும்.

தற்போது கோடை வெயில் வாட்டி எடுப்பதால் பச்சை தேயிலை மகசூல் பாதியாக குறைந்து விட்டது. இதனால் தொழிற்சாலைகளுக்கு பச்சை தேயிலை வரத்து நாளுக்குநாள் குறைந்து வருகிறது. மகசூல் குறைவால் பச்சை தேயிலை கிலோ ரூ.18 வரை விலை கிடைத்து வருகிறது. இதனால் விலை இருந்தும் பச்சை தேயிலை மகசூல் இல்லாததால் விவசாயிகள், தோட்ட உரிமையாளர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

போதிய மகசூல் கிடைக்காததால் பச்சை தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தோட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர். மேலும் பச்சை தேயிலை மகசூல் இல்லாததால் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு கூட வருமானம் கிடைப்பது இல்லை என்று கூறி தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க மறுத்து வருகிறது.

கூடலூர் தாலுகாவில் 200-க்கும் மேற்பட்ட சிறு தேயிலை தோட்டங்கள் உள்ளன. பெரும்பாலான தோட்டங்களில் பச்சை தேயிலை மகசூல் இல்லாததால் தோட்ட தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை. இதனால் கூடலூர் பகுதியில் மட்டும் சுமார் 5 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்து உள்ளனர். இதனால் அவர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

எனவே தங்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று கூடலூர் பகுதியில் தேயிலை தோட்டங்களில் பணியாற்றி வேலை இழந்த தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

கோடை வறட்சியால் கூடலூர் பகுதியில் தேயிலை செடிகள் கருகி விட்டன. இதனால் பச்சை தேயிலை மகசூல் பாதிக்கப்பட்டு உள்ளது. சிறு தேயிலை தோட்டங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர். இவர்களுக்கு குறைந்தபட்ச கூலியை தவிர வேறு எந்த சலுகைகளும் வழங்கப்படுவதில்லை. தற்போது மகசூல் இல்லாததால் தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க மறுத்து வருகிறது. சில தோட்ட நிர்வாகங்கள் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே பச்சை தேயிலை பறிக்க தொழிலாளர்களுக்கு வேலை வழங்குகிறது. இதனால் பொருளாதார ரீதியாக தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே வேலை இழந்துள்ள தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story