கோத்தகிரி அருகே, தேயிலை தோட்டத்தில் உலா வரும் சிறுத்தைப்புலிகள் - தொழிலாளர்கள் பீதி


கோத்தகிரி அருகே, தேயிலை தோட்டத்தில் உலா வரும் சிறுத்தைப்புலிகள் - தொழிலாளர்கள் பீதி
x
தினத்தந்தி 13 April 2019 4:00 AM IST (Updated: 12 April 2019 11:42 PM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே தேயிலை தோட்டத்தில் சிறுத்தைப்புலிகள் உலா வருகின்றன. இதனால் தொழிலாளர்கள் பீதியடைந்து உள்ளனர்.

கோத்தகிரி,

கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது கடும் வறட்சி நிலவுகிறது. இதற்கிடையில் வனப்பகுதியில் வாழும் வனவிலங்குகளுக்கு குடிநீர் மற்றும் பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மேலும் அடிக்கடி வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக குடிநீர் மற்றும் உணவு தேடி வனவிலங்குகள் பொதுமக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைய தொடங்கி விட்டன. இதனால் மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழும் அபாயம் உள்ளது.

கோத்தகிரி அருகே உள்ளது அக்கால். இது தேயிலை தோட்டங்கள் மற்றும் வனப்பகுதியை ஒட்டி அமைந்து இருக்கிறது. இங்கு காட்டெருமை, காட்டுப்பன்றி, சிறுத்தைப்புலி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அவ்வப்போது இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அக்கால் பகுதியில் உள்ள ஒரு தனியார் தேயிலை தோட்டத்தில் 2 சிறுத்தைப்புலிகள் உலா வருகின்றன. மேலும் அங்குள்ள பாறைகள் மற்றும் மரங்களில் ஏறி படுத்து ஓய்வெடுக்கின்றன. இதனால் அப்பகுதி பொதுமக்களும், பச்சை தேயிலை பறிக்கும் தொழிலாளர்களும் பீதியடைந்து உள்ளனர். மேலும் இந்த சிறுத்தைப்புலிகளால் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படும் முன்பு அவைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து வனவிலங்குகள் பாதுகாப்பு குழு நிர்வாகி சந்தோஷ் கூறியதாவது:-

அக்கால் வனப்பகுதியில் சிறுத்தைப்புலிகள் மட்டுமின்றி கருஞ்சிறுத்தைகளும் காணப்படுகின்றன. இவைகளால் மனிதர்களுக்கு இதுவரை எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. தேயிலை தோட்டங்களில் சிறுத்தைப்புலிகளை கண்டால் ஒருசிலர் கல்லை தூக்கி எறியும் செயல்களில் ஈடுபடுகின்றனர். வனவிலங்குகளுக்கு தொல்லை கொடுத்தால் மட்டுமே அவை மனிதர்களை தாக்கும். எனவே இதுபோன்ற செயலில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

மேலும் சிலர் சிறுத்தைப்புலிகள் மற்றும் கருஞ்சிறுத்தைகளை காட்டுவதாக கட்டணம் வசூலித்து அனுமதியின்றி வனப்பகுதிக்குள் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்கின்றனர். இதை தடுக்க வேண்டும். தற்போது அக்கால் பகுதியில் சுற்றித்திரிவது ஆண் சிறுத்தைப்புலி மற்றும் அதன் குட்டி. மேலும் இந்த ஆண் சிறுத்தைப்புலியின் ஜோடி கருஞ்சிறுத்தை ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story