கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் வேட்பாளர் செல்லகுமார் வாக்கு சேகரிப்பு
கிருஷ்ணகிரியில் கோட்டை மசூதி மற்றும் டவுன் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் செல்லகுமார் வாக்கு சேகரித்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில், காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் செல்லகுமார் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கிராமம், கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரித்து வருகின்றனர். மேலும் வேட்பாளரும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தீவிர வாக்கு சேகரித்து வருகிறார்.
இந்தநிலையில் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு சென்று காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார். அந்த வகையில் கிருஷ்ணகிரி கோட்டை மசூதி மற்றும் டவுன் பகுதியில் டாக்டர் செல்லகுமார் நேற்று வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மத்தியில் நிலையான ஆட்சி அமைய காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள். கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தருவேன். கிருஷ்ணகிரி-திண்டிவனம் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பேன். ஜோலார்பேட்டை-கிருஷ்ணகிரி-ஓசூர் ரெயில் பாதை திட்டத்தை ஒரு ஆண்டில் தொடங்கி அதை நிறைவேற்றிட நடவடிக்கை எடுப்பேன். இந்த பகுதியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மத்தியில் மதசார்பற்ற ஆட்சி அமைய காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அனைத்து ஜமாத் கமிட்டி தலைவர் முஸ்தாக் அகமது, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ., நகர தி.மு.க. செயலாளர் நவாப், காங்கிரஸ் மாவட்ட தலைவர் சுப்பிரமணி, முன்னாள் மாவட்ட தலைவர்கள் நாராயணமூர்த்தி, ஜேசுதுரைராஜ் மற்றும் ரகமத்துல்லா, முன்னாள் கவுன்சிலர் அஸ்லம் உள்பட பலர் உடன் சென்றனர்.
Related Tags :
Next Story