பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் கிராமங்களில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் தி.மு.க. வேட்பாளர் ஆ.மணி வாக்குறுதி
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள கிராமங்களில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என்று தி.மு.க. வேட்பாளர் ஆ.மணி பிரசாரம் செய்து வாக்குறுதி அளித்தார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் ஆ.மணி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ., தொகுதி பொறுப்பாளர் பார் இளங்கோவன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பிரசாரம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார்கள். வேட்பாளர் ஆ.மணி திறந்த ஜீப்பில் கிராமம், கிராமமாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட போதக்காடு, மெணசி, குண்டல்மடுவு, புதூர், கரியதாதனூர், மாரியம்மன்கோவில் புதூர், பண்டாரசெட்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் மற்றும் பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் வேட்பாளர் ஆ.மணி மற்றும் நிர்வாகிகள் வீதி, வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தனர். இந்த வாக்கு சேகரிப்பின்போது ஆங்காங்கே பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள சிறப்பம்சங்களை பொதுமக்களிடம் அவர் எடுத்துக்கூறி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
இந்த வாக்கு சேகரிப்பின்போது வேட்பாளர் ஆ.மணி பேசுகையில், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் என்னென்ன தேவைகள் உள்ளன என்பதை கண்டறிந்து பொதுமக்களின் அனைத்து அடிப்படை தேவைகளையும் நிறைவேற்ற நான் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டால் நடவடிக்கை எடுப்பேன். அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வேன். அனைத்து கிராமப்புறங்களிலும் போக்குவரத்து வசதியை மேம்படுத்த முயற்சி எடுப்பேன். பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சிகளின் வளர்ச்சிக்கான திட்டங்களை கொண்டு வர பாடுபடுவேன் என்று பேசினார்.
இந்த பிரசார நிகழ்ச்சிகளில் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ராசுதமிழ்ச்செல்வன், நகர செயலாளர்கள் ஜெயசந்திரன், உதயகுமார் மற்றும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story