மயிலாடுதுறை அருகே பரிதாபம், வாய்க்காலில் சரக்கு ஆட்டோ கவிழ்ந்ததில் அ.தி.மு.க.வினர் 4 பேர் பலி - ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள்
மயிலாடுதுறை அருகே வாய்க்காலில் சரக்கு ஆட்டோ கவிழ்ந்ததில் ஒரே கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க.வினர் 4 பேர் பலியாகினர். நேற்று முன்தினம் நடந்த இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
குத்தாலம்,
நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே மங்கநல்லூரில் உள்ள குத்தாலம் தெற்கு ஒன்றிய அலுவலகத்தில் கந்தமங்கலம் கிராம அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கந்தமங்கலம் கிராமத்தில் இருந்து 16 பேர் சரக்கு ஆட்டோவில் சென்று கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து கூட்டம் முடிந்ததும், சரக்கு ஆட்டோவில் கந்தமங்கலம் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.
அன்று இரவு 10 மணி அளவில் அனந்தநல்லூர் அருகே சென்றபோது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடுவதற்காக ஒதுங்கியபோது சரக்கு ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகே இருந்த வாய்க்காலில் கவிழ்ந்தது.
இதில் சரக்கு ஆட்டோவில் சென்ற அருள்தாஸ் (வயது 50) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் காயம் அடைந்த அனைவரும், 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே விநாயகராஜா (40), தனபால் (60) ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.
மேலும் மதியழகன் (40), பிச்சை (75) மற்றும் சரக்கு ஆட்டோ டிரைவர் மாரிமுத்து ஆகியோர் மேல் சிகிச்சைச்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்தநிலையில் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதியழகன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
மேலும் காயம் அடைந்த பாண்டியன் (38), செந்தில்குமார் (40), வரதராஜன் (50), சீனிவாசன் (60), திருநாவுக்கரசு (30), ராஜேந்திரன் (55), பாலு (48), கார்த்திக் (13), முருகன் (40), பொன்னுசாமி (73) ஆகியோர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின் றனர்.
இந்த சம்பவம் குறித்து பாலையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே கிராமத்தை சேர்ந்த 4 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத் தியது.
விபத்தில் சிக்கி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், பவுன்ராஜ் எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
Related Tags :
Next Story