“நாட்டின் நலன் காக்க நாம் தமிழர் கட்சியை ஆதரியுங்கள்” சீமான் வேண்டுகோள்
“நாட்டின் நலன் காக்க நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு தாருங்கள்“ என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்தார்.
ஆறுமுகநேரி,
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கிறிஸ்டன்டைன் ராஜசேகரை ஆதரித்து, காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நேற்று மாலை பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜனதாவும், காங்கிரசும் எதிர்த்து நின்று போட்டியிட்டாலும், அவைகள் கொள்கை ரீதியில் ஒரே கட்சிகள்தான். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. 20 தொகுதிகளில் போட்டியிட்டாலும், ஒரு தொகுதியில்கூட இஸ்லாமிய வேட்பாளரை நிறுத்தவில்லை. மேலும் பா.ஜனதா போட்டியிடும் 5 தொகுதிகளில் தூத்துக்குடியை தவிர மற்ற தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளரை நிறுத்தவில்லை. தூத்துக்குடி தொகுதியிலும் 2 மாதங்களுக்கு முன்பே கனிமொழி தேர்தல் பிரசாரத்தை தொடங்கியதால்தான் அங்கு தி.மு.க. போட்டியிடுகிறது.
ஒருவேளை இந்த தேர்தலில் தி.மு.க. 15 முதல் 20 தொகுதிகளில் வென்று, மத்தியில் பா.ஜனதா ஆட்சி அமைக்க தி.மு.க.வின் ஆதரவு தேவைப்படுகிறது என்றால் நிச்சயம் தி.மு.க., பா.ஜனதாவுடன் சென்று விடும்.
நாம் தமிழர் கட்சி ஒரு போதும் தன்மானத்தை இழந்து, சீட்டுக்கும், பணத்துக்கும் ஆசைப்பட்டு, எந்த கட்சியுடனும் கூட்டணி சேராது. நாங்கள் தனித்து வென்று தூய்மையான அரசை அமைப்போம்.
பா.ஜனதா ஆட்சியில் முத்தலாக் மற்றும் பொருளதார அடிப்படையில் உயர் வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு என்று 2 மசோதாக்களையே நிறைவேற்றி உள்ளனர். மற்றபடி 5 ஆண்டுகளில் நாட்டுக்கு எதுவுமே நிறைவேற்றவில்லை. அதுபோன்றுதான் அ.தி.மு.க.வும். இந்த 2 கட்சிகளும் செய்த சாதனைகளை பட்டியலிட்டு, வாக்கு கேட்க முடியுமா?.
தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி 10 ஆண்டுகள் ஆட்சி செய்தபோதும், தமிழகத்தில் எந்த நல்ல திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. மாறாக தமிழகத்துக்கு நச்சு திட்டங்களை கொண்டு வந்தது தி.மு.க.வும், அ.தி.மு.க.வும்தான். இந்த நச்சு திட்டங்களை முதலில் எதிர்த்தது நாம் தமிழர் கட்சி.
நாட்டின் நலன் காக்கவும், இளம் தலைமுறையினரின் கல்வி, வேலைவாய்ப்பு சிறக்கவும், நாம் தமிழர் கட்சிக்கு கரும்புடன் நிற்கும் விவசாயிக்கு ஆதரவு தாருங்கள். கரும்பாக எங்களை எவ்வளவுதான் கசக்கி பிழிந்தாலும், நாட்டு மக்களுக்கு இனிப்பான நன்மைகளையே தருவோம் என்று உறுதி கூறுகிறோம். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கிறிஸ்டன்டைன் ராஜசேகருக்கு கரும்புடன் நிற்கும் விவசாயி சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்.
இவ்வாறு சீமான் பேசினார்.
கூட்டத்தில், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கிறிஸ்டன்டைன் ராஜசேகர் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story