மனோஜ்பாண்டியனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறசெய்ய வேண்டும் நடிகர் கார்த்திக் பேச்சு
அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ்பாண்டியனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என நெல்லையில் மனித உரிமை காக்கும் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக் தெரிவித்தார்.
நெல்லை,
நெல்லை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியனை ஆதரித்து மனித உரிமை காக்கும் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக் நேற்று பிரசாரம் செய்தார். அவர், தாழையூத்தில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். கரையிருப்பு, தச்சநல்லூர், மேலப்பாளையம் குறிச்சி உள்ளிட்ட இடங்களில் இரட்டை இலை சின்னத்துக்கு அவர் ஆதரவு திரட்டினார்.
பிரசாரத்தின் போது திறந்த ஜீப்பில் நின்று நடிகர் கார்த்திக் பேசியதாவது:-
நெல்லை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்குகேட்டு வந்து இருக்கிறேன். நீங்கள் அவரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
கடந்த ஆண்டு நெல்லையில் மனித உரிமை காக்கும் கட்சியை தொடங்கினேன். ஓராண்டுக்குள் தேர்தல் வந்து விட்டது. அதனால் நாம் நல்ல கூட்டணியில் சேர்ந்து இருக்கிறோம்.
சில கட்சிகள் தேர்தல் நேரத்தில் பொய்யான வாக்குறுதிகளை கொடுக்கிறார்கள். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளையும் அள்ளி விடுகிறார்கள். நாட்டின் எதிர்கால நலனை மையமாக வைத்து தேர்தல் அறிக்கை வெளியிட வேண்டும்.
அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை தேர்தல் ஆணையம் பதிவு செய்ய வேண்டும். வெற்றி பெற்ற கட்சி 5 ஆண்டுகளில் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அப்படி நிறைவேற்றாத கட்சிகளை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். என்னை பொறுத்த வரையில் தேர்தல் அறிக்கையை நிறைவேற்றும் கட்சிகளுடன் கூட்டணி வைத்து இருக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தின்போது முத்துக்கருப்பன் எம்.பி, நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா, அமைப்பு செயலாளர் சுதா பரமசிவம், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், இளைஞர் அணி செயலாளர் அரிகர சிவசங்கர், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, பகுதி செயலாளர் மாதவன், பா.ம.க. நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சீயோன் தங்கராஜ், சமத்துவ மக்கள் கட்சியின் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சேவியர், கட்சி நிர்வாகிகள் ஸ்ரீதர், அழகேசராஜா, சீனிவாசன், தமிழக மக்கள் முன்னேற்ற கழக நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story