பெருந்துறை அருகே மாற்றுத்திறனாளி தூக்குப்போட்டு தற்கொலை மது குடித்ததை மனைவி திட்டியதால் விபரீதம்


பெருந்துறை அருகே மாற்றுத்திறனாளி தூக்குப்போட்டு தற்கொலை மது குடித்ததை மனைவி திட்டியதால் விபரீதம்
x
தினத்தந்தி 13 April 2019 4:15 AM IST (Updated: 13 April 2019 4:15 AM IST)
t-max-icont-min-icon

பெருந்துறை அருகே மது குடித்ததை மனைவி திட்டியதால் மாற்றுத்திறனாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெருந்துறை,

பெருந்துறை அருகே உள்ள சில்லிபாளையம் புதுகாலனியை சேர்ந்தவர் நாகப்பன் (வயது 60). அவருடைய மனைவி சின்னபாப்பா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் 2 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதனால் நாகப்பனும், சின்னபாப்பாவும் தனியாக வசித்து வந்தனர். நாகப்பன் மாற்றுத்திறனாளி. 3 சக்கர சைக்கிளில் சென்று கூலி வேலை செய்து வந்தார். மேலும் அவருக்கு குடிப்பழக்கம் உண்டு.

இந்த நிலையில் கடந்த 11–ந் தேதி நாகப்பனை திடீரென காணவில்லை. இதனால் சின்னப்பாப்பா அவரை தேடிப்பார்த்தார். அப்போது அவர் துடுப்பதி டாஸ்மாக் கடை அருகே 3 சக்கர சைக்கிளில் குடிபோதையில் மயங்கி கிடந்தார். உடனே சின்னபாப்பா தண்ணீர் தெளித்து அவரை எழுப்பிவிட்டார்.

பின்னர் மதுகுடித்ததால் அவரை திட்டியுள்ளார். இதனால் நாகப்பன் மனமுடைந்தார். தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். மனைவி நடந்து வர நாகப்பன் 3 சக்கர சைக்கிளில் வீட்டுக்கு முதலில் சென்றார். அங்கு வீடு அருகே உள்ள ஓலை குடிசையில் அவர் கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் வீட்டுக்கு வந்த சின்னபாப்பா சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுபற்றி பெருந்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நாகப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story