ரூ.10 லட்சம் போதைப்பாக்கு, புகையிலை பொருட்கள் பறிமுதல் : 2 பேர் கைது
தாராவியில் குடோனில் பதுக்கப்பட்ட ரூ.10 லட்சம் போதைப்பாக்கு, புகையிலை பொருட்கள் பறிமுதல். 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
மும்பை தாராவி கும்பர்வாடா பிரேம்நகரில் உள்ள 2 குடோன்களில் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ள குட்கா போதைப்பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக தாராவி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அந்த குடோன்களில் அதிரடி சோதனை போட்டனர்.
இந்த சோதனையின் போது, 2 குடோன்களிலும் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த போதைப்பாக்கு மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் என்பது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், தாராவியை சேர்ந்த சோயிப் சேக் (வயது28), இர்சாத் கான் (38) ஆகிய 2 பேர் தான் அந்த போதைப்பாக்குகளை விற்பனை செய்ய பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
போதைப்பாக்கு பறிமுதல் செய்யப்பட்டது பற்றி போலீசார் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story