மக்களிடையே கலகம் ஏற்படுத்தி சர்வாதிகாரியாக மோடி முயற்சி- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆவேச பேச்சு
மக்களிடையே கலகம் ஏற்படுத்தி சர்வாதிகாரியாக மோடி முயற்சி செய்வதாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
தேனி,
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தேனி அன்னஞ்சி விலக்கில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி கலந்துகொண்டு பேசினார். மேலும் இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தேனி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாவது:-
சாதி, மதம், மொழி, உணவு பழக்கத்தால் மக்களிடையே கலகமூட்டி, நாட்டின் சர்வாதிகாரியாக வருவதற்கு பிரதமர் நரேந்திரமோடி தன்னை தயார்படுத்தி கொண்டு இருக்கிறார். எனவே, அவரை விரட்டியடிக்க வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக இருக்க வேண்டும். இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் உள்பட அனைத்து மதத்தினரும் ஒரே தாயின் வயிற்று பிள்ளைகளாக இருக்கிறோம்.
இதுவே உலக அரங்கில், இந்தியாவுக்கு இருக்கும் பெருமை. அதை குலைக்க வேண்டும் என்று நினைக்கும், நரேந்திரமோடிக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும். ராகுல்காந்தி ஏழைகள் மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளார் என்பதை, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் பார்க்கலாம். இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி போன்று ராகுல்காந்தியும் ஏழைகளுக்கு வாழ்வு தரவேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறார்.
அவர் நாட்டின் பிரதமராக வந்தால் தான் இந்தியாவுக்கு விடிவுகாலம் ஏற்படும். எனவே, நரேந்திரமோடியை இந்தியாவை விட்டும், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை தமிழகத்தை விட்டும் துரத்துவோம். இதற்கு மக்கள் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். மத்தியில் ராகுல்காந்தி பிரதமர் ஆவார். அதேபோல் தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் முதல்- அமைச்சர் ஆவார்,
இவ்வாறுஅவர் பேசினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் காதர்மைதீன் பேசுகையில், ‘நாட்டில் மோடி அரசுக்கு ராகு காலம் வந்துவிட்டது. பாரத நாட்டுக்கு ராகுல் காலம் வந்துவிட்டது. டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ராகுல்காந்தி ஏற்றி வைக்கப் போகிறார். அதுபோல், சென்னை செயின்ட்ஜார்ஜ் கோட்டையில் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியேற்ற போகிறார். ஆளும் கட்சியினர் பணத்தை அள்ளி வீசி, வாக்குகளை பெறலாம் என்று கருதுகின்றனர்’ என்றார்.
கூட்டத்தில், காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, தி.மு.க. துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ., மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ., தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் முருகேசன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story