காரமடை அருகே, நகைக்காக கழுத்தை இறுக்கி பெண்ணை கொன்றது அம்பலம் - தம்பதி உள்பட 3 பேர் கைது


காரமடை அருகே, நகைக்காக கழுத்தை இறுக்கி பெண்ணை கொன்றது அம்பலம் - தம்பதி உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 13 April 2019 4:15 AM IST (Updated: 13 April 2019 5:09 AM IST)
t-max-icont-min-icon

நகைக்காக கழுத்தை இறுக்கி பெண்ணை கொன்ற தம்பதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

காரமடை,

கோவை மாவட்டம் காரமடை அருகே கணுவாய்பாளையம் கட்டாஞ்சி மலைப்பாதையில் 4-வது கொண்டை ஊசி வளைவில் உள்ள பள்ளத்தில் கடந்த 4-ந் தேதி 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் காரமடை போலீசார் பெண்ணின் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்தனர்.

கோவை பீளமேடு ஹட்கோ காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 47). இவர் தண்ணீர் பந்தல் பகுதியில் மோட்டார் கம்பெனி வைத்துள்ளார். இவரது மனைவி வளர்மதி (43) தான் கொலை செய்யப்பட்டு ரத்த காயங்களுடன் கிடந்த பெண் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் கோவை ரத்தினபுரி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த யோகராஜ் (44), இவரது மனைவி சித்ரகலா (41), கோவை பாப்பநாயக்கன்புதூரை சேர்ந்த ஜீவா (24) ஆகிய மூவரும் நகைக்கு ஆசைப்பட்டு வளர்மதியை கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

யோகராஜ் தங்க நகை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இவரது மனைவி சித்ரகலாவுக்கு பீளமேடு ஹட்கோ காலனியை சேர்ந்த வளர்மதி பழக்கமாகி உள்ளார். யோகராஜுக்கு கடன் அதிகமாக இருந்துள்ளது. அவரது நண்பர் ஜீவாவுக்கும் கடன் தொல்லை இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி மாலை வளர்மதி, யோகராஜ் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது யோகராஜ், அவரது மனைவி சித்ரகலா, ஜீவா ஆகியோர் தங்களுக்கு கடன் தொல்லை இருப்பதால், நகைகளை கழட்டி தரும்படி வளர்மதியிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் மறுத்துள்ளார்.

இதையடுத்து 3 பேரும் சேர்ந்து கயிற்றால் வளர்மதியின் கழுத்தை இறுக்கியதாக தெரிகிறது. மேலும் கிரிக்கெட் மட்டையாலும் தாக்கி உள்ளனர். இதில் அவர் பரிதாபமாக இறந்தார். பின்னர் இரவு நேரத்தில் வளர்மதியின் உடலை துணியால் சுற்றி கட்டாஞ்சி மலையில் உள்ள பள்ளத்தில் தள்ளி விட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story