சந்தர்ப்பவாத கூட்டணி எது? சரத்குமார் விளக்கம்


சந்தர்ப்பவாத கூட்டணி எது? சரத்குமார் விளக்கம்
x
தினத்தந்தி 13 April 2019 12:15 AM GMT (Updated: 12 April 2019 11:46 PM GMT)

சந்தர்ப்பவாத கூட்டணி எது? என்பதற்கு விருதுநகர் தொகுதி பிரசாரத்தில் சரத்குமார் விளக்கம் அளித்தார்.

விருதுநகர்,

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று விருதுநகர் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். விருதுநகரில் தே.மு.தி.க. வேட்பாளர் அழகர்சாமிக்கு ஆதரவு திரட்டி அவர் பேசுகையில் கூறியதாவது:-

இளைய சமுதாயத்தினர் எதிர்காலத்தில் நல்ல வாழ்வாதாரம் பெற்றிட மத்தியில் நல்ல ஆட்சி, வலுவான ஆட்சி தொடர வேண்டும். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஜெயலலிதா பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை அறிவித்தார். அதனை தொடர்ந்து நிறைவேற்றி வரும் தமிழக அரசுக்கு தேவையானதை பெற்றிட மத்தியில் வலுவான ஆட்சி அமைய வேண்டும். அண்டை நாடான சீனா, பாகிஸ்தானின் அச்சுறுத்தல்கள், தீவிரவாதிகளின் மிரட்டல்கள் ஆகியவற்றை எதிர்கொள்ள வலிமையான பிரதமர் வேண்டும். எனவே பிரதமராக மோடி மீண்டும் பொறுப்பு ஏற்க வேண்டும்.

இதற்கு 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். ஒவ்வொரு அரசியல் கட்சியிலும் மாறுபட்ட கொள்கைகள் இருக்கலாம். வேறுபட்ட கோட்பாடுகள் இருக்கலாம். ஆனால் மத்தியில் வலிமையான ஆட்சி வேண்டும் என்பதற்காகத்தான் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைந்துள்ளது.

ஊழல் கூட்டணி

தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி ஊழல் கூட்டணி. 10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் தி.மு.க.வும் அங்கம் வகித்தது. 2006-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை ஹெலிகாப்டர் ஊழலில் ரூ.200 கோடி, 2ஜி ஊழலில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் கோடி, நிலக்கரி ஊழலில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கோடி என ஊழல் செய்தனர். அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது.

இவ்வாறு அவர் பேசினார். அவருடன் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியும் வந்தார்.

சிவகாசி

சிவகாசியில் சரத்குமார் பேசியதாவது:-

தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையே நடக்கும் போட்டி தான் இந்த தேர்தல். அ.தி.மு.க. தலைமையிலான மெகா கூட்டணியை ஸ்டாலின் சந்தர்ப்பவாத கூட்டணி என்று கூறுகிறார். ஆனால் ஒரு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கூட்டணி அமைப்பது தான் சந்தர்ப்பவாத கூட்டணி ஆகும். சந்தர்ப்பவாத கூட்டணி என்று சொன்னால் அது தி.மு.க. தலைமையிலான கூட்டணி தான். 1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரையில் பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்தனர். அதன் பின்னர் 2004 முதல் 2014-ம் ஆண்டு வரை காங்கிரசுடன் கூட்டணி வைத்து 15 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி பொறுப்பில் இருந்தவர்கள் தி.மு.க.வினர்.

தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்பட பல கட்சிகள் உள்ளன. ஆனால் கேரளாவில் ராகுல்காந்தியை எதிர்த்து கம்யூனிஸ்டு போட்டியிடுகிறது இது தான் சந்தர்ப்பவாதம். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story