மத்திய பெங்களூரு தொகுதியில் சுயேச்சையாக போட்டி: தேர்தல் அறிக்கையை வெளியிட்டார், நடிகர் பிரகாஷ்ராஜ்


மத்திய பெங்களூரு தொகுதியில் சுயேச்சையாக போட்டி: தேர்தல் அறிக்கையை வெளியிட்டார், நடிகர் பிரகாஷ்ராஜ்
x
தினத்தந்தி 12 April 2019 11:54 PM GMT (Updated: 12 April 2019 11:54 PM GMT)

மத்திய பெங்களூரு சுயேச்சை வேட்பாளர் நடிகர் பிரகாஷ்ராஜ், தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் ஏரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

பெங்களூரு,

நடிகர் பிரகாஷ்ராஜ் மத்திய பெங்களூரு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவர் நேற்று பெங்களூருவில் தான் வெற்றி பெற்றால், என்ன செய்வேன் என்பது குறித்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் கூறி இருப்பதாவது:-

அங்கன்வாடி மையங்கள், பகல் நேர குழந்தைகள் காப்பகங்களாக மாற்றப்படும். ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளின் நலனில் சிறப்பு கவனம் செலுத்தப்படும். தலித், முஸ்லிம், மாற்றுத்திறனாளி குழந்தைகள் கல்வி பயில உள்ள சமூக ரீதியிலான தடைகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். போதிய அளவுக்கு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். அரசு பள்ளிகள் மூடுவதை தடுப்போம். மூடப்பட்ட அரசு பள்ளிகளை திறக்க நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்.

கல்வியில் ஒரு பகுதியாக தொழிற்பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கப்படும்.

பசுமை மின் உற்பத்தி திட்டங்கள் ஊக்குவிக்கப்படும். நகரில் உள்ள ஏரிகள் தூய்மையாக்கப்படும். ஏரிகள் பாதுகாக்கப்படும். ஏரிகளை ஆக்கிரமிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மரங்கள் நட நடவடிக்கை எடுக்கப்படும்.

உலர்ந்த இலைகள் மற்றும் குப்பைகளை தீ வைத்து எரிக்க தடை விதிக்கப்படும். நகரில் வாகன மாசுவை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பிரச்சினைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை ஆதரிப்போம். மேலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துவோம். மூத்த குடிமக்களை காக்க ஒரு சட்டம் இயற்ற முயற்சி செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story