மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்க மத்திய அரசு தயங்குகிறது - தேவேகவுடா பேச்சு


மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்க மத்திய அரசு தயங்குகிறது - தேவேகவுடா பேச்சு
x
தினத்தந்தி 13 April 2019 5:28 AM IST (Updated: 13 April 2019 5:28 AM IST)
t-max-icont-min-icon

மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்க மத்திய அரசு தயங்குகிறது என்றும், காவிரி பிரச்சினையில் கர்நாடகத்தின் நலனுக்காக போராடினேன் என்றும் தேவேகவுடா கூறினார்.

மண்டியா,

மண்டியா தொகுதியில் காங்கிரஸ் கூட்டணியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் முதல்-மந்திரியின் மகன் நிகில் குமாரசாமி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நாகமங்களா தொகுதியில் நேற்று தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா ஆகியோர் கலந்துகொண்டனர். இருவரும் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தனர்.

இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா கலந்துகொண்டு பேசியதாவது:-

காவிரி நதி நீர் பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த விஷயத்தில் கர்நாடகத்தின் நலனுக்காக நான் தீவிரமாக போராடினேன். 2007-ம் ஆண்டு இது தொடர்பாக தீர்ப்பு வந்தபோது, அதை நான் கடுமையாக எதிர்த்தேன்.

அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நான் உதவினேன். அப்போது கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி செய்தது. அந்த அரசு எனக்கு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு 4 வாரங்கள் கெடு விதித்தது.

மத்திய அரசு, அந்த வாரியத்தை அமைக்க தயார் என்று சுப்ரீம் கோர்ட்டில் கூறியது. இதை எதிர்த்து நான், உடல்நலக்குறைவையும் பொருட்படுத்தாமல், விதான சவுதாவில் உண்ணாவிரதம் இருந்தேன். அப்போது மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் புதிதாக ஒரு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது.

அதில் நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்று கூறியது. ஒவ்வொரு நிலையிலும் நான் காவிரி பிரச்சிைனயில் கர்நாடகத்தின் நலனுக்காக நான் போராட்டம் நடத்தினேன்.

உயிர் உள்ளவரை மக்களுக்காக எனது போராட்டத்தை தொடருவேன். இங்கு போட்டியிடுவது எனது பேரன் என்பது முக்கியமல்ல. நானும், சித்தராமையாவும் ஒற்றுமையாக இங்கு வந்துள்ளோம்.

சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தினார். பிரதமர் மோடி, சுயேச்சை வேட்பாளர் சுமலதாவுக்கு ஓட்டுப்போடுங்கள் என்று கூறியுள்ளார். இதை முஸ்லிம் மக்கள் சற்று யோசித்து பார்க்க வேண்டும்.

கோத்ராவில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். குடிநீருக்கு பிச்சை எடுக்க வேண்டிய நிலை உள்ளது. காவிரி பிரச்சினையில் நமக்கு ஏற்படும் அநீதியை தடுக்க வேண்டியுள்ளது. மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்க மத்திய அரசு தயங்குகிறது.

தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று நான் கருதினேன். அநீதிகளுக்கு எதிராக போராட, நீங்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று எனக்கு அழுத்தம் கொடுத்தனர். அதனால் துமகூருவில் போட்டியிடுகிறேன்.

இவ்வாறு தேவேகவுடா பேசினார்.

இதைதொடர்ந்து சித்தராமையா பேசுகையில், பிரதமர் மோடி தனது ஆட்சி காலத்தில் இதுவரை விவசாயிகள் மற்றும் மக்களுக்கு எந்த நல்லதும் செய்யவில்லை. மோடி 56 இஞ்ச் மார்பை கொண்டவர் என கூறுகிறார். ஆனால் அவர் ஏழை மக்களின் பிரச்சினைகளுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மோடி சங்பரிவார் அமைப்பின் பின்னணி கொண்டவர். இந்தியாவில் ஜனநாயகத்தை காக்க வேண்டுமெனில் மீண்டும் மோடி பிரதமராக விடக் கூடாது என்றார்.

Next Story