கர்நாடகத்தில் இன்று மோடி-ராகுல் போட்டி பிரசாரம் : உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்


கர்நாடகத்தில் இன்று மோடி-ராகுல் போட்டி பிரசாரம் : உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்
x
தினத்தந்தி 13 April 2019 5:39 AM IST (Updated: 13 April 2019 5:39 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் இன்று (சனிக்கிழமை) பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் போட்டி பிரசாரம் செய்கிறார்கள். இதையொட்டி உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

பெங்களூரு, 

நாடாளுமன்ற தேர்தல் கர்நாடகத்தில் 2 கட்டமாக வருகிற 18, 23-ந் தேதிகளில் நடக்கிறது. பெங்களூரு உள்பட தென் கர்நாடகத்தில் உள்ள 14 தொகுதிகளில் 18-ந் தேதியும், தார்வார், சிவமொக்கா உள்பட மீதமுள்ள 14 தொகுதிகளில் 23-ந் தேதியும் தேர்தல் நடக்கிறது. முதல்கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பகிரங்க பிரசாரம் செய்ய இன்னும் 4 நாட்களே உள்ளன. இதனால் அரசியல் கட்சிகளின் தேசிய மற்றும் மாநில தலைவர்கள் கொளுத்தும் வெயிலிலும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே பிரதமர் மோடி நேற்று கொப்பல் தொகுதியில் பிரசாரம் செய்து பா.ஜனதா வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். இந்த நிலையில் கர்நாடகத்தில் இன்று (சனிக்கிழமை) பிரதமர் மோடி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் போட்டி பிரசாரம் செய்கி றார்கள்.

அவர்கள் இருவரும் கொளுத்தும் வெயிலில் வாக்கு சேகரிக்க உள்ளனர். பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) மங்களூருவில் மதியம் 2 மணிக்கும், பெங்களூருவில் மாலை 4 மணிக்கும் பிரசாரம் செய்கிறார். இதற்காக பெங்களூருவில் உள்ள அரண்மனை மைதானத்தில் பா.ஜனதா பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதுபோல் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை 12 மணிக்கு கோலார், மதியம் 3 மணிக்கு சித்ரதுர்காவில் நடைபெறும் கட்சியின் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

அதை முடித்துக் கொண்டு அவர் மண்டியா தொகுதியில் இடம் பெற்றுள்ள கே.ஆர்.நகர் தாலுகாவில் மாலை 5.30 மணிக்கு காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

பிரதமர் மோடியும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஒரே நாளில் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட உள்ளதால், கர்நாடகத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தேசிய தலைவர்களின் அடுத்தடுத்த பிரசாரத்தால் கர்நாடகத்தில் முதல்கட்ட தேர்தல் களம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

Next Story