நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 3-வது கட்ட பயிற்சி வகுப்பு


நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 3-வது கட்ட பயிற்சி வகுப்பு
x
தினத்தந்தி 14 April 2019 4:30 AM IST (Updated: 13 April 2019 10:18 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 3-வது கட்ட பயிற்சி வகுப்பு நடந்தது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 1,273 வாக்குப்பதிவு மையங்களில் 2,374 வாக்குச்சாவடிகள் உள்ளன. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் 11 ஆயிரத்து 515 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். இந்த நிலையில் நேற்று வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 3-வது கட்ட பயிற்சி வகுப்பு நடந்தது.

இந்த பயிற்சி வகுப்பு செங்கம், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், கலசபாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்தது.

திருவண்ணாமலை மவுண்டு செயின்ட் ஜோசப் பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்புக்கு திருவண்ணாமலை உதவி கலெக்டர் ஸ்ரீதேவி தலைமை தாங்கினார்.

இதில் மாவட்ட கல்வி அலுவலர் அருள் செல்வன் மற்றும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். பயிற்சி வகுப்பில் வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் பணிகள் குறித்தும், வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் அலுவலர்கள் வாக்குப்பதிவு எந்திரங்களை கையாளும் முறை, வாக்குப்பதிவிற்கு முந்தைய நாள் வாக்குச்சாவடிக்கு சென்றவுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் வாக்குப்பதிவு நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள், வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட வேண்டிய அமைப்பு, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விளக்கி கூறப்பட்டது.

பயிற்சி வகுப்பு நடைபெற்ற இடத்தில் தபால் ஓட்டு செலுத்துவதற்கான பெட்டிகள் வைக்கப்பட்டு இருந்தது. இதில் வாக்குச்சாவடி அலுவலர்கள் சிலர் தபால் ஓட்டுகளை செலுத்தினர்.

ஆரணி நாடாளுமன்ற தொகுதியில், ஆரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 311 வாக்குச்சாவடி மையங்களுக்கு தேர்தல் பணி மேற்கொள்ள உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 3-வது கட்ட பயிற்சி ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

ஆரணி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான ரத்தினசாமி தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார். ஆரணி உதவி கலெக்டர் இல.மைதிலி, ஆரணி தாசில்தார் தியாகராஜன், வட்ட வழங்கல் அலுவலர் மணி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தமிழ்மணி, மண்டல துணை தாசில்தார்கள் சத்தியன், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரணி உதவி தேர்தல் தாசில்தார் திருநாவுக்கரசு வரவேற்றார்.

பயிற்சியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் 740 பேர் கலந்துகொண்டனர். இதனையடுத்து அவர்கள், தங்களது தபால் ஓட்டினை பதிவு செய்தனர்.

Next Story