அ.தி.மு.க. கூட்டணி தலைவர்களை பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் கிடையாது டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
அ.தி.மு.க. கூட்டணி தலைவர்களை பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் கிடையாது என்று தேர்தல் பிரசாரத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
தர்மபுரி,
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தர்மபுரி தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேப்பமரத்தூர், மங்களக்கொட்டாய், மணலூர், திப்பிரெட்டிஅள்ளி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த பிரசார கூட்டங்களில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கோவிந்தசாமிக்கு ஆதரவு திரட்டினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சி தொடர வேண்டும் என்ற நோக்கத்துடன் அ.தி.மு.க. தலைமையில் ஒரு மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் வலிமையான ஆட்சி மீண்டும் மலரும். தமிழகத்தில் இந்த ஆட்சி தொடர்ந்து நீடிக்கும். தமிழக மக்கள் எங்கள் கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள். இதனிடையே தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசார கூட்டங்களுக்கு செல்லும்போது அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களை பற்றி கடுமையாக விமர்சிக்கிறார். கூட்டணி கட்சி தலைவர்களை பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் கிடையாது. இனிவரும் காலங்களில் இதுபோல் பேசுவதை அவர் நிறுத்தி கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் நீட்தேர்வை கொண்டு வந்தது தி.மு.க.வும், காங்கிரசும் தான். அந்த நீட்தேர்வை ரத்து செய்வோம் என்று அவர்கள் கூறுவது மிகவும் அபத்தமானது. விவசாய கடன், கல்விக்கடன் தள்ளுபடி, பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என்று நிறைவேற்ற முடியாத பல வாக்குறுதிகளை அளித்து தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் தமிழக மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். இவர்களின் பொய்யான பிரசாரத்தை மக்கள் யாரும் நம்ப தயாராக இல்லை. மக்கள் நலனுக்காக பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வரும் மத்திய, மாநில அரசுகளுக்கு தமிழக மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
இந்த பிரசார கூட்டங்களில் அ.தி.மு.க. ஒன்றிய முன்னாள் செயலாளர் விசுவநாதன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் நல்லத்தம்பி, பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கடேஷ்வரன், முன்னாள் எம்.எல்.ஏ. இல.வேலுச்சாமி, மாவட்ட செயலாளர் இமயவர்மன், மாநில அமைப்பு துணை செயலாளர் சத்தியமூர்த்தி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story