ஆண்டிப்பட்டி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல்
தேர்தல் பிரசாரத்துக்காக பிரதமர் மோடி வந்த நிலையில், ஆண்டிப்பட்டி அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆண்டிப்பட்டி,
ஆண்டிப்பட்டி அடுத்த கரிசல்பட்டி விலக்கு பகுதியில் அ.தி.மு.க–பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பங்கேற்கும் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தநிலையில், விழா நடைபெறும் பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சண்முகசுந்தரபுரம் என்ற கிராமத்தை சேர்ந்த பெண்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் தேனி–மதுரை சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.
அப்போது பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அவர்கள் சாலைமறியலில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து காலிக்குடங்களுடன் வந்த பெண்கள் குடிநீர் கேட்டு சண்முகசுந்தரபுரம் செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஆண்டிப்பட்டி ஒன்றிய அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு அதிகாரிகள் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தங்கள் கிராமத்திற்கு 3 மாதங்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்வதில்லை, ஆழ்துளை கிணறுகளும் வறண்டுவிட்டது, இதனால் வைகை அணை கூட்டுக்குடிநீர் திட்டத்தில் தங்கள் கிராமத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்று பெண்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து ஓரிரு நாளில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்திற்கு அருகில் பெண்கள் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.