மத்திய அரசு உதவி இருந்தால் மட்டுமே மாநில அரசு சிறப்பாக செயல்பட முடியும் விஜயபிரபாகரன் பேச்சு
மத்திய அரசின் உதவி இருந்தால் மட்டுமே மாநில அரசு சிறப்பாக செயல்பட முடியும் என்று விஜயபிரபாகரன் பேசினார்.
ஆண்டிப்பட்டி,
தேனி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமார், ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் லோகிராஜன் ஆகியோருக்கு ஆதரவாக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் நேற்று ஆண்டிப்பட்டியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:–
விஜயகாந்த் ஆரோக்கியத்துடன் நலமாக உள்ளார். விரைவில் உங்களை சந்திப்பார். மத்தியிலும், மாநிலத்திலும் ஒருமித்த கருத்துடைய கட்சிகளின் ஆட்சி அமைந்தால் மட்டுமே மக்களுக்கான அனைத்து நலத்திட்டங்களும் கிடைக்கும். மத்தியில் பா.ஜனதா அரசு தொடர்ந்தால் மட்டுமே பொதுமக்களுக்கான திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற முடியும். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி தேர்தலுக்கு பின் காணாமல் போய் விடும். தற்போது அமைந்துள்ள அ.தி.மு.க., பா.ஜனதா., தே.மு.தி.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் அமைத்துள்ளது மெகா கூட்டணி. இந்த கூட்டணியை யாராலும் வெல்ல முடியாது. இந்தியாவில் நதிகள் இணைப்பை செய்து முடித்தால் பாதி பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்து விடும். இவ்வாறு அவர் பேசினார். அப்போது ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் லோகிராஜன் உடன் இருந்தார்.
நடிகை விந்தியா நேற்று அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக ஆண்டிப்பட்டியில் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:–
எனது பேச்சில் காரம், காமெடி கலந்து இருக்கும். என்னை விட ஒருவர் அதிகம் காமெடி செய்பவராக உள்ளார். அவர்தான் தி.மு.க.வின் தலைவர் மு.க.ஸ்டாலின். அவர் வெறும் தலைவர்தான். இன்னும் சின்னப்பிள்ளைத்தனமாக சட்டசபையில் சட்டையை கிழித்துக்கொண்டு திரிகிறார். அவர் சொல்கிறார் அ.தி.மு.க.வுக்கு ஊழல் பற்றி பேச அருகதை இல்லை என்று. ஊழலின் மொத்த உருவமே தி.மு.க.தான். பஞ்ச பூதங்களிலும் ஊழல் செய்தவர்கள் தி.மு.க.வினர். 18 தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. ஜெயித்தால் அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்ப்பேன் என்கிறார். இது கூரை மீது ஏறி கோழி பிடிக்க தெரியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போவேன் என்பது போல் உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.