மோகனூர் அருகே கிணற்றில் மூழ்கி 2 மாணவர்கள் சாவு நீச்சல் பழக சென்ற போது பரிதாபம்


மோகனூர் அருகே கிணற்றில் மூழ்கி 2 மாணவர்கள் சாவு நீச்சல் பழக சென்ற போது பரிதாபம்
x
தினத்தந்தி 14 April 2019 4:45 AM IST (Updated: 14 April 2019 1:16 AM IST)
t-max-icont-min-icon

மோகனூர் அருகே நீச்சல் பழக சென்ற போது கிணற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மோகனூர், 

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே உள்ள கடகால்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருடைய மகன் மணிகண்டன் (வயது 14). அதே பகுதியில் வசித்து வருபவர் நாகராஜ். இவருடைய மகன் நல்லுசாமி என்கிற விக்னேஷ்வரன் (14). நண்பர்களான மணிகண்டனும், விக்னேஷ்வரனும் அணியாபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மதியம் 1.30 மணியளவில் இவர்கள் இருவரும் மேலும் சில நண்பர்களுடன் சேர்ந்து லத்துவாடி கிராம நிர்வாக அலுவலகம் பின்புறம் உள்ள விவசாய கிணற்றில் நீச்சல் பழக சென்றனர். இதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் தண்ணீரில் இறங்கி நீச்சல் பழகி கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக விக்னேஷ்வரன் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தான். அவனை காப்பாற்றுவதற்காக மணிகண்டன் சென்றான். ஆனால் அவனும் தண்ணீரில் மூழ்கினான். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற நண்பர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டனர்.

இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் விக்னேஷ்வரனும், மணிகண்டனும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து பொதுமக்கள் நாமக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அவர்கள் கிணற்றுக்குள் இறங்கி மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் போராடி 2 பேரின் உடல்களையும் மீட்டு மேலே கொண்டு வந்தனர். இது குறித்து தகவல் அறிந்த மோகனூர் போலீசார் அங்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். நீச்சல் பழக சென்ற போது 2 மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story