நாமக்கல் உழவர்சந்தையில் அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பன் வாக்கு சேகரிப்பு


நாமக்கல் உழவர்சந்தையில் அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பன் வாக்கு சேகரிப்பு
x
தினத்தந்தி 13 April 2019 9:45 PM GMT (Updated: 13 April 2019 8:01 PM GMT)

நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பன் வாக்கு சேகரித்தார்.

நாமக்கல், 

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் காளியப்பன் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலையில் அவர் நாமக்கல் உழவர்சந்தையில் வியாபாரிகள் மற்றும் காய்கறி வாங்க வந்த பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் நாமக்கல் நகரில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள சாலைகள், புதிய குடிநீர் திட்டம் உள்ளிட்ட அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்து கூறி, இதுபோன்ற திட்டங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு கிடைத்திட இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதை தொடர்ந்து அவர் நேற்று சேலம் மாவட்டம் சங்ககிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் கிராமம், கிராமமாக சென்று மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரித்தார்.

இதில் சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் ராஜா மற்றும் அ.தி.மு.க., அதன் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். ஆங்காங்கே பெண்கள் ஆரத்தி எடுத்து வேட்பாளர் காளியப்பனுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

Next Story