நீட் தேர்வை நீக்கி விட்டால் தமிழகம் வளர்ச்சி அடைந்து விடுமா? கமல்ஹாசன் ஆவேசம்


நீட் தேர்வை நீக்கி விட்டால் தமிழகம் வளர்ச்சி அடைந்து விடுமா? கமல்ஹாசன் ஆவேசம்
x
தினத்தந்தி 13 April 2019 10:30 PM GMT (Updated: 13 April 2019 8:19 PM GMT)

‘‘நீட் தேர்வை நீக்கி விட்டால் தமிழகம் வளர்ச்சி அடைந்து விடுமா?’’ என்று விருதுநகர் மாவட்ட பிரசாரத்தின் போது கமல்ஹாசன் கேள்வி எழுப்பினார்.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அவர் விருதுநகர், அருப்புக்கோட்டையில் வேட்பாளர் முனியசாமியை ஆதரித்து பேசியதாவது:–

விருதுநகரில் 5 ஆண்டு காலமாக மேம்பாலம் கட்ட முடியவில்லை. காமராஜர் பிறந்த மண் கல்வியில் சிறந்து விளங்குகிறது. ஆனால் இங்கு மருத்துவ கல்லூரி இல்லை. வெளிநாட்டு வங்கி கணக்கில் எவ்வளவு பணம் சேர்ந்துள்ளது என்பது தான் அவர்களுக்கான கவலை. இது பிரதமருக்கான தேர்தல் தான். பிரதமராக யார் வேண்டும் என்றாலும் வரட்டும். ஆனால் விருதுநகரின் கதியை பற்றி குரல் கொடுக்க ஒருவர் வேண்டாமா? அதற்கு தான் நமது வேட்பாளர் முனியசாமியை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற பட்டியல் எங்களிடம் உள்ளது. குடிநீருடன், சாக்கடை நீர் கலக்கும் அவலம் நடக்கிறது. இதற்கெல்லாம் தீர்வு காண வேண்டாமா?

நான் இங்கு மிகுந்த கோபத்துடன் வந்துள்ளேன். உங்கள் கோபம் தணிந்தால்தான் எனது கோபம் தணியும். நீங்கள் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தால்தான் என் முகத்தில் புன்னகை வரும். நான் முன்பே அரசியலுக்கு வந்து இருக்க வேண்டும். தாமதமாக வந்து வீணாக்கி விட்டேன். அதற்காக என்னை மன்னியுங்கள். நாம் பட்ட கஷ்டங்களை இளைஞர்கள் படக்கூடாது. அதற்கு மாற்றம் தேவை. அதற்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த தேர்தலில் இரு கழகங்களும் அகற்றப்பட வேண்டும். அவர்களை சார்ந்துள்ளவர்களும் அகற்றப்பட வேண்டும். தோழர்கள் தெரியாமல் சென்று அங்கு போய் சேர்ந்து விட்டார்கள். அவர்கள் நிச்சயம் நம்முடன் வந்து விடுவார்கள். காசு வாங்கி கொண்டு ஓட்டு போடக்கூடாது. என் படத்தில் ஒரு வசனம் வரும். யார் நல்லவன்? யார் கெட்டவன் என்று கேட்டால் ‘‘வேலு நாயக்கர் தெரியாது’’ என்று சொல்வார். நிச்சயம் நாம் நல்லவர்கள். நாம் மாற்றம் கொண்டு வர வேண்டும். நாளை நமதே.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் சாத்தூரில் நாடாளுமன்ற வேட்பாளர் முனியசாமி, சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சுந்தர்ராஜுக்கு ஆதரவு திரட்டி பேசுகையில் கூறியதாவது:–

இந்த பகுதியில் பசுமை பட்டாசு தயார் செய்ய கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின்படி ஆபத்து இல்லாத, மாசு இல்லாத பட்டாசு தயார் செய்வது எப்படி என விஞ்ஞான வல்லுனர்களுடம் ஆலோசனை நடத்தி வருகிறோம். அதை சீக்கிரம் கொண்டு வந்து விடுவோம். நதிகளில் எல்லாம் சாக்கடை கலக்கிறது. எங்கு எங்கு ஆறு இருக்கிறதோ அங்கு எல்லாம் இரு கழகங்களும் மாறி மாறி மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலில் வழக்கு போட்டது நாங்கள் தான் என்று கூறுகிறார்கள். நான் கேட்கிறேன் நீட் தேர்வை நீக்கிவிட்டால் தமிழகம் வளர்ச்சியடைந்து விடுமா? படிக்கிற குழந்தைகளுக்கு தரமான உணவு, குடிநீர் வழங்குங்கள். வாக்கு அளிக்கும் போது எந்த சின்னத்திற்கு ஓட்டுபோட்டாலும் தாமரை படம் தெரியும் என்று கூறுகிறார்கள் பார்த்து வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

விருதுநகரில் பேசிய கமல்ஹாசன் பெருந்தலைவர் காமராஜருக்கு புகழாரம் சூட்டினார். அப்போது அவர் கூறுகையில், ‘‘தமிழகம் தேசிய நீரோட்டத்தில் கலக்க வேண்டும். தமிழகம் தனித்தன்மையுடன் விளங்க வேண்டும். ஆனால் தனித்து விடப்பட்டு விடக்கூடாது. தேசியத்தை பற்றி பேசுவதற்கு பொருத்தமான இடம் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த விருதுநகர் தான். அவர் தேசிய தலைவர். காமராஜர் படிக்காதவர் தான். சாதாரணமாக இருந்தார். ஆனால் அவர் எத்தனை ராணி, ராஜாக்களை உருவாக்கி கிங்மேக்கராக இருந்தார். அவரை போல விருதுநகர் மக்களும் இத்தேர்தல் மூலம் கிங்மேக்கராக முடியும். அதற்கு நீங்கள் ஏப்ரல் 18–ந்தேதி விதை தூவவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story