மேகதாதுவில் அணை கட்டப்படும் என்ற ராகுல் காந்தியின் பேச்சுக்கு ஸ்டாலினின் பதில் என்ன? கரூரில் எடப்பாடி பழனிசாமி கேள்வி


மேகதாதுவில் அணை கட்டப்படும் என்ற ராகுல் காந்தியின் பேச்சுக்கு ஸ்டாலினின் பதில் என்ன? கரூரில் எடப்பாடி பழனிசாமி கேள்வி
x
தினத்தந்தி 14 April 2019 4:45 AM IST (Updated: 14 April 2019 2:14 AM IST)
t-max-icont-min-icon

மேகதாதுவில் அணை கட்டப்படும் என்ற ராகுல் காந்தியின் பேச்சுக்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் பதில் என்ன? என்று கரூர் பிரசாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

கரூர், 

கரூர் நாடாளுமன்ற தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளரான நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையை ஆதரித்து கரூர் பஸ் நிலையம் மனோகரா கார்னர் ரவுண்டானா அருகே நேற்று மாலை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்த வேனில் நின்றபடி மக்களிடையே வாக்கு கேட்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மத்தியில் நிலையான ஆட்சி அமைவதற்காக நாடாளுமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க. தலைமையில் மக்கள் செல்வாக்குள்ள கட்சிகளெல்லாம் ஒன்றாக இணைந்து மெகா கூட்டணி அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மற்றொருபுறம் தி.மு.க. தலைமையில் அமைக்கப்பட்டிருக்கிற கூட்டணி கொள்கையில்லாத கூட்டணி. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தான் வைகோ தனது ம.தி.மு.க. கட்சியை தொடங்கினார். அப்போது தி.மு.க. என்பது குடும்ப கட்சி என்று விமர்சித்தார். அதே வைகோ தற்போது மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சராக்குவேன் என சொல்வது எந்த விதத்தில் நியாயம்.

தி.மு.க. கூட்டணி சார்பில் மட்டும் தான் ராகுல் காந்தி பிரதமர் என்று கூறுகின்றனர். ஆனால் எதிர்க்கட்சிகள் உள்ளிட்டோர் அவரை இன்னும் பிரதமராக ஏற்று கொள்ளவில்லை. இந்த முரண்பட்ட நிலைப்பாட்டில் இருந்தால் எப்படி பிரதமரை தேர்வு செய்து நிலையான ஆட்சியை இவர்களால் தர முடியும் என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு கர்நாடகாவிலே ராகுல் காந்தி பேசுகையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும், தான் பிரதமரானால் காவிரி பிரச்சினை தொடர்பான ஆணையம் கலைக்கப்படும் என கூறியிருக்கிறார். இதற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின், என்ன பதில் தரப்போகிறார்?. இதில் இருந்தே ராகுல் வெற்றி பெற்றால் ஒரு சொட்டு தண்ணீர் கூட கரூர் உள்பட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களுக்கு கிடைக்காது என்பது தெரிகிறது. அவர் பிரதமரானால் தமிழகம் பாலைவனமாக மாறிவிடும். அப்படிப்பட்ட நிலைமை நமக்கு தேவையா? எனவே தமிழகத்துக்கு அநீதி இழைக்கக்கூடியவர்களுக்கு தேர்தலில் தக்க பாடத்தை மக்கள் புகட்ட வேண்டும்.

ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டவர் (செந்தில்பாலாஜி) இன்று அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்து விட்டு, எம்.ஜி.ஆர். யாரை தீயசக்தி (தி.மு.க.) என்று குறிப்பிட்டாரோ அவர்களுடன் போய் சேர்ந்திருக்கிறார். அவர் தற்போது தி.மு.க.வின் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். கடந்த 2016-ல் அரவக்குறிச்சியில் இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு அவரை வெற்றி பெற வைத்தோம். அவர் கட்சிக்குள்ளேயே சதி செய்ததால் ஆண்டவனால் அவரது பதவி பறிக்கப்பட்டது. தற்போது தி.மு.க.வின் சின்னத்தில் நிற்கும் அவர், அடுத்த தேர்தலில் எந்த சின்னத்தில் நிற்பார் என்பது தெரியாது. இது நன்றியை மறந்து, பச்சோந்தியை விட நிறம் மாறும் தன்மையை தான் அவர் கொண்டிருப்பதை காட்டுகிறது. தாம் போனதால் கட்சி அழியும் என எண்ணிணார். அதற்கு மாறாக கரூரில் பன்மடங்கு அ.தி.மு.க. வளர்ச்சி பெற்று அசுர பலத்தோடு இருப்பதை காண முடிகிறது.

அரவக்குறிச்சியில் உள்ள இஸ்லாமிய மக்களுக்கு அ.தி.மு.க. அரசு என்றும் பாதுகாப்பு அரணாக விளங்கும். முத்தலாக் சட்டம் நாடாளுமன்றத்திலே வந்த போது, இஸ்லாமியர்களின் கருத்துக்களை பிரதிபலிக்கும் வகையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் குரல் எழுப்பினர். அந்த தீர்மானத்திற்கு அ.தி.மு.க. ஆதரவு கொடுக்கவில்லை. இதனை இஸ்லாமிய மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். இந்தியாவிலேயே, சட்டம்-ஒழுங்கை பாதுகாத்து அமைதி பூங்காவாக திகழ்கிற மாநிலத்தில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்பதை நாங்கள் பெருமையாக சொல்கிறோம். ஆனால் மு.க.ஸ்டாலின் தான் செல்கிற இடங்களில் எல்லாம் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று கூறுவது ஏற்புடையதல்ல.

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் வேதனைக்குரியது, கண்டிக்கத்தக்கது ஆகும். அதில் தவறு செய்த குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதனை திரித்து கூறி அ.தி.மு.க. ஆட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்திட முயற்சிக்கின்றனர். அதே வேளையில் பெரம்பலூர் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ., மாவட்ட துணை செயலாளர் வீட்டில் வேலைபார்க்கும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காரணத்தினால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. சூலூரில் ரெயிலில் கர்ப்பிணி பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட தி.மு.க. நிர்வாகிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பெரம்பலூரில் அழகு நிலையத்தில் புகுந்து பெண்ணை தாக்கியது மற்றும் பிரியாணி கடை, புரோட்டா கடைகளுக்கு சென்று சாப்பிட்டு விட்டு காசு கொடுக்காமல் வருவது, காசு கேட்டால் உரிமையாளரை தாக்குவது என தி.மு.க.வினரின் அராஜக போக்கு அனைவருக்கும் தெரிந்ததே. இதற்கு ஸ்டாலின் போய் கட்ட பஞ்சாயத்து செய்கிறார். எதிர்க்கட்சியாய் இருக்கிறபோதே இப்படி அராஜகம் செய்கிறார்கள் என்றால், ஆட்சி அதிகாரத்திற்கு வந்து விட்டால் நாட்டு மக்களை நிம்மதியாக வாழ விடுவார்களா? என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்கியது அ.தி.மு.க.. விசைத்தறி, பாய் பின்னும் தொழில் உள்பட ஏழை தொழிலாளர்களுக்கு ரூ.2,000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினோம். ஸ்டாலின் உத்தரவின் பேரில் அவரது வழக்கறிஞர் புகார் செய்ததால், தேர்தல் ஆணையம் அதனை நிறுத்தி வைத்துள்ளது. தேர்தல் முடிந்ததும் அந்த ரூ.2,000 வழங்கப்படும். 2006-2011 தி.மு.க. ஆட்சியில் கடுமையான மின்வெட்டால் மக்கள் பாதிக்கப்பட்டனர். ஜெயலலிதா வழியில், தற்போது தடையில்லா மின்சாரத்தை அ.தி.மு.க. அரசு கொடுத்து வருகிறது. இதனால் புதிய தொழிற்சாலைகள் அமைக்க பலர் முன்வருவதால், நேரடியாக 5 லட்சமும், மறைமுகமாக 5 லட்சமும் என 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்பு திட்டம் கரூர் பக்கத்தில் இணைக்கப்படுகிறது. இதனால் கரூர் செழுமையான பகுதியாக மாறும். கரூர் மாவட்டத்தில் எங்கெல்லாம் ஏரி, குளம் உள்ளதோ அங்கு தண்ணீர் நிரப்பப்படும். கரூருக்கு ரூ.295 கோடியில் மருத்துவ கல்லூரி பணிகள் நிறைவு பெற்று விரைவில் திறக்கப்பட உள்ளது. பசுபதிபாளையம், குளத்துபாளைத்தில் ரூ.13 கோடியில் குகைவழிப்பாதை, ரூ.69 கோடியில் காவிரிக்குடிநீர் திட்டம், கரூர் ரெயில் நிலையம்-சேலம் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் ரூ.22 கோடியில் சாலை என்பன உள்ளிட்ட பணிகள் நடந்துள்ளன. மேலும் 50 ஆண்டு கால கோரிக்கையை ஏற்று புஞ்சை புகளூர் தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று காவிரியின் குறுக்கே புஞ்சை புகளூரில் ரூ.490 கோடியில் கதவணை கட்டப்படும். ரூ.77 கோடியில் கரூர் நகரில் சுற்றுவட்ட சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கு முடிந்ததும் அந்த புறவழிச்சாலை பணி மேற்கொள்ளப்படும். கரூர்-சேலம், கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுக்க 8 இடங்களில் பாலம் கட்டப்படும். எனவே அனுபவம்-திறமை வாய்ந்த வேட்பாளர் தம்பிதுரையை இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக அரவக்குறிச்சியில் முதல்-அமைச்சர் பேசுகையில், மத்தியில் நல்லாட்சி மலர வேண்டும். திறமையான நிர்வாக திறன் படைத்த மோடி மீண்டும் பிரதமராக வேண்டும். தமிழக மக்கள்தான் எங்களுக்கு முக்கியம். அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவது எங்கள் கடமை. இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழுமிடங்களில் திட்டமிட்டு அவர்களின் மனதை மாற்ற முயற்சி செய்து வருகிறார்கள். அ.தி.மு.க. தான் சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் அரணாக திகழ்ந்து வருகிறது. தி.மு.க., பா.ஜ.க.வோடு சேர்ந்தால் மதவாதம் இல்லை, ஆனால் அ.தி.மு.க., பா.ஜ.க.வோடு சேர்ந்தால் மதவாதம் என்று பேசுகிறார்கள். அ.தி.மு.க. சாதி, மதம், இனம், மொழிக்கு அப்பாற்பட்டு மக்கள் நலனுக்காக பாடுபடுகிறது, என்று தெரிவித்தார்.

இதேபோல், கிருஷ்ணராயபுரம் பஸ் நிறுத்தம் பகுதியில் முதல்-அமைச்சர் பேசுகையில், உள்வீரராக்கியம் பிரிவில் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுக்கும் வகையில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படும். தாந்தோன்றி ஒன்றியத்துக்கு உட்பட்ட 14 ஊராட்சி பகுதிகளிலும் மற்றும் கடவூர், கிருஷ்ணராயபுரம், பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி பகுதிகளிலும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும், என்றார்.

பிரசாரத்தில் மாவட்ட செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், கீதா எம்.எல்.ஏ., மாவட்ட அவை தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதேபோல் குளித்தலையில் பெரம்பலூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் என்.ஆர்.சிவபதியை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார்.

Next Story