மோடி மீண்டும் பிரதமரானால் புதுச்சேரிக்கு பேராபத்து - நாராயணசாமி எச்சரிக்கை


மோடி மீண்டும் பிரதமரானால் புதுச்சேரிக்கு பேராபத்து - நாராயணசாமி எச்சரிக்கை
x
தினத்தந்தி 14 April 2019 5:00 AM IST (Updated: 14 April 2019 2:22 AM IST)
t-max-icont-min-icon

மோடி மீண்டும் பிரதமரானால் புதுச்சேரிக்கு பேராபத்து என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்தார்.

புதுச்சேரி,

புதுவையில் காங்கிஸ்– தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று புதுவையில் பிரசாரத்தில் ஈடுபட்டார். லாஸ்பேட்டை உழவர்சந்தையில் பிரசாரத்தை முதல்–அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

பிரசாரத்தின்போது முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:–

கடந்த 2019–ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது மோடி வாக்குறுதிகளை அள்ளி வீசினார். வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவருடைய வங்கிக்கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்றார். விவசாய கடன் ரத்து, பெண்களுக்கு இடஒதுக்கீடு என பல அறிவிப்புகளை வெளியிட்டார். ஆனால் எதையுமே நிறைவேற்றவில்லை.

பணமதிப்பிழப்பினை கொண்டுவந்து நாட்டின் பொருளாதாரத்தை படுபாதாளத்தில் தள்ளினார். சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பினால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் சுமார் 6 கோடி பேர் வேலையிழந்துள்ளனர். புதுச்சேரிக்கு எந்த திட்டத்தையும் தரவில்லை. கவர்னராக கிரண்பெடியை அனுப்பி மாநில அரசுக்கு தொல்லை கொடுத்து வருகிறார்.

கவர்னர் கிரண்பெடி இலவச அரிசி, சென்டாக் உதவித்தொகை, மில் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க தடையாக உள்ளார். பொதுமக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றக்கோரி நானும், அமைச்சர்களும், கூட்டணி கட்சியினரும் ஒன்றிணைந்து கவர்னர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினோம். இப்போது இலவச அரிசி வந்தும் வழங்க முடியவில்லை.

மத்திய அரசிடம் போராடி ஸ்மார்ட் சிட்டி, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையம், குடிநீர், சுற்றுலா, துறைமுக திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் எந்த ஒரு திட்டத்தையும் கொண்டுவரவில்லை. ரங்கசாமி ஆட்சியில் லாஸ்பேட்டை தொகுதி புறக்கணிக்கப்பட்டது. இப்போது நடைபெற இருப்பது சட்டமன்ற தேர்தல் அல்ல.

ராகுல்காந்தி, மோடி இவர்களில் யார் பிரதமர் என்பதற்காகத்தான் இந்த தேர்தல். யார் பிரதமராக வந்தால் புதுச்சேரிக்கு நன்மை கிடைக்கும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவோம் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். 5 கோடி குடும்பங்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.72 ஆயிரம் அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.

அது மட்டுமில்லாமல் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார். நமது வேட்பாளராக அனுபவம் வாய்ந்த வைத்திலிங்கம் நிறுத்தப்பட்டுள்ளார். என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் மருத்துவக்கல்லூரி உரிமையாளர். அவருக்கு மாகி, ஏனாம் பற்றிக்கூட தெரியாது. பாரதீய ஜனதா சிறுபான்மையினர், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோருக்கு விரோதமான கட்சி.

நாட்டில் அராஜகத்தை கட்டவிழ்த்து எழுத்து சுதந்திரத்துக்கு தடை போட்டவர்கள். எதிர்க்கட்சிகளை நசுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். மீண்டும் அவர் பிரதமரானால் புதுச்சேரிக்கு பேராபத்து ஏற்படும். மாநில வளர்ச்சி தடைபடும். நாட்டுக்கு மிகப்பெரிய கேடாக இருக்கும். ஹிட்லர் ராஜ்யம் நடத்தும் மோடியை தூக்கி எறிந்து ராகுல்காந்தியை பிரதமராக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story