கெயில் நிறுவனம் சார்பில் குழாய்கள் பதிக்கும் பணிக்கு எதிராக விவசாயிகள் தர்ணா திருவெண்காடு அருகே பரபரப்பு


கெயில் நிறுவனம் சார்பில் குழாய்கள் பதிக்கும் பணிக்கு எதிராக விவசாயிகள் தர்ணா திருவெண்காடு அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 14 April 2019 4:00 AM IST (Updated: 14 April 2019 4:01 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்காடு அருகே கெயில் நிறுவனம் சார்பில் குழாய்கள் பதிக்கும் பணிக்கு எதிராக விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருவெண்காடு,

நாகை மாவட்டம், சீர்காழி தாலுகா பழையபாளையம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் எண்ணெய் எரிவாயு கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இருந்து தினமும் கிடைக்கும் எரிவாயுவை செம்பனார்கோவில் அருகே மேமாத்தூர் கிராமத்தில் உள்ள எரிவாயு சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லும் வகையில் கடந்த சில மாதங்களாக பழையபாளையம் முதல் மேமாத்தூர் வரை கெயில் நிறுவனம் சார்பில் ராட்சத இரும்பு குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இந்த குழாய்களை விளைநிலங்கள் வழியாக கொண்டு செல்வதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று திருவெண்காடு அருகே நாங்கூர் பகுதியில் விளைநிலங்களுக்கு இடையே குழாய்கள் பதிக்கும் பணி தொடங்கியது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் 1000-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். பின்னர் குழாய்கள் பதிக்கும் பணியை தடுத்து நிறுத்தினர்.

அப்போது அவர்கள், குழாய் பதிக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து விளைநிலங்களில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது விவசாயிகள் கூறுகையில், நில உரிமையாளர்களுக்கு தெரியாமலேயே, சர்வாதிகார போக்குடன் எண்ணெய் நிறுவனம் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் கடந்த சில நாட்களாக விளை நிலங்களுக்கு இடையே குழாய்கள் பதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணியை நிறுத்தும் வரை எங்கள் விளை நிலத்திலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

இதனை அறிந்த சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு வந்தனா, சீர்காழி தாசில்தார் சபீதாதேவி, திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரியா உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் குழாய்கள் பதிக்கும் பணி உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story