அஞ்செட்டி அருகே கல்வி அலுவலர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை பல கோடி ரூபாய் சொத்து ஆவணங்கள் சிக்கின
அஞ்செட்டி அருகே கல்வி அலுவலர் வீட்டில் நடந்த வருமான வரித் துறையினரின் சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள வண்ணாத்திப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 43). இவர் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டார கல்வி அலுவலராக பணி புரிந்து வருகிறார். மேலும் இவர் விடுதி, பள்ளி ஆகியவையும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் இவர் மீது பல்வேறு புகார்கள் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் சுதாகரின் வீடு மற்றும் அவருடைய தங்கும் விடுதி, பள்ளி ஆகியவற்றில் திடீர் சோதனை நடத்தினர்.
விடிய, விடிய நடந்த இந்த சோதனையில் கணக்கில் வராத பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இன்று (திங்கட் கிழமை) ஓசூரில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு சுதாகரிடம், அதிகாரிகள் தெரிவித்தனர்.
கல்வி அலுவலர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story