அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் தேர்தல் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு கலெக்டர் அறிவிப்பு


அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் தேர்தல் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 14 April 2019 10:15 PM GMT (Updated: 14 April 2019 8:16 PM GMT)

மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்குப்பதிவிற்கு முன்பு தேர்தல் முகவர்கள் முன்னிலையில் 50 மாதிரி வாக்குகள் பதிவு நடைபெறும் என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.

சிவகங்கை,

சிவகங்கை புனித ஜஸ்டின் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாடாளுமன்றம், மானாமதுரை சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி தலைமை அலுவலர் உள்பட அனைத்து அலுவலர்களும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான 3–வது கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜெயகாந்தன் கலந்து கொண்டு பேசியதாவது:– வாக்குச்சாவடியில் பணி மேற்கொள்வதற்காக தலைமை அலுவலர் மற்றும் 1, 2, 3, 4 நிலை அலுவலர்களுக்கான 3–வது கட்ட பயிற்சி வழங்க தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.

மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 7 ஆயிரத்து 270 அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு சிவகங்கை, திருப்புவனம், திருப்பத்தூர், காரைக்குடி ஆகிய இடங்களில் பயிற்சி நடைபெற்றது. இதில் வாக்குச்சாவடி மையங்களில் பணி மேற்கொள்ளும் அலுவலர்கள் முக்கியமாக தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளை நன்கு தெரிந்து கொண்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக ஓட்டுப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டுக்கருவி மற்றும் வாக்கை உறுதிப்படுத்தும் கருவி இவை அனைத்தும் அதன் இயக்கம் குறித்து தெரிவிக்கபட்டது.

அதேபோல் வாக்குப்பதிவு நாளன்று வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு தேர்தல் (அரசியல் கட்சி) முகவர்கள் முன்னிலையில் ஒவ்வொரு மையத்திலும் 50 வாக்குகள், மாதிரி வாக்குப்பதிவாக நடத்தி தெளிவுப்படுத்த வேண்டும். வாக்குப்பதிவு மையங்களுக்கு அலுவல் பணிக்கான விண்ணப்பங்கள், கையேடுகள், ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளதை பெற்றுக்கொள்வதுடன், அதன் விவரம் குறித்து உரிய அலுவலர்களிடம் தெளிவுப்படுத்திக் கொள்ளவேண்டும்.

எனவே தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து அலுவலர்களும் சிறந்தமுறையில் பணி மேற்கொண்டு தேர்தலை சிறப்பாக நடத்திட அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story