தமிழ்ப்புத்தாண்டையொட்டி, சுருளி அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் - நீராட முடியாமல் ஏமாற்றம்
தமிழ்ப்புத்தாண்டையொட்டி சுருளி அருவியில் நீராடுவதற்கு சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஆனால் தண்ணீர் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
உத்தமபாளையம்,
கம்பம் அருகேயுள்ள சுற்றுலா தலமான சுருளி அருவிக்கு பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து செல்கின்றனர். ராமேசுவரத்துக்கு அடுத்தபடியாக புண்ணிய தலமாகவும் சிறப்பு பெற்று விளங்குகிறது. நேற்று தமிழ்ப்புத்தாண்டையொட்டி சுருளி அருவிக்கு நீராடுவதற்கு சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
இந்தநிலையில் தேனி மாவட்டத்தில் கடும் வறட்சி காரணமாக தற்போது அருவியில் நீர்வரத்து இல்லை. பெரும்பாலும் விசேஷ நாட்களில் ஹைவேவிஸ் மலையில் தூவானம் ஏரியில் இருந்து அருவிக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் தமிழ்ப்புத்தாண்டையொட்டி தண்ணீர் திறக்கவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் நீராட முடியாமல் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். அதில் சிலர் தோட்டங்களில் உள்ள குழாய்களில் வரும் தண்ணீரில் குளித்துவிட்டு, சுருளிவேலப்பர், விபூதி குகைகோவில், கைலாசநாதர் கோவில், ஆதிஅண்ணாமலையார் கோவில் ஆகிய கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர்.
சித்திரை திருவிழாவையொட்டி கம்பம் சுருளிவேலப்பர் கோவிலில் இருந்து சாமியை ஊர்வலமாக டிராக்டர் மூலம் சுருளி அருவிக்கு கொண்டு வந்தனர். அங்கு சாமிக்கு குழாயில் வந்த தண்ணீர் பிடித்து பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
வீரபாண்டி மாரியம்மன் கோவில், கம்பம் மாரியம்மன்கோவில் உள்ளிட்ட கோவில்களில் சித்திரை திருவிழா நடைபெற உள்ளது. இக்கோவில்களில் நேர்த்திகடன் செலுத்த உள்ளவர்கள் அருவியில் நீராடி விட்டு புனிதநீரை பாட்டில் மற்றும் பாத்திரங்களில் பிடித்து செல்வது வழக்கம். அருவியில் தண்ணீர் இல்லாததால் பக்தர்கள் திரும்பி சென்றனர்.
Related Tags :
Next Story