சொத்து தகராறில் சித்தியை வெட்டி கொலை செய்த வாலிபர்


சொத்து தகராறில் சித்தியை வெட்டி கொலை செய்த வாலிபர்
x
தினத்தந்தி 15 April 2019 3:45 AM IST (Updated: 15 April 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

உத்தமபாளையம் அருகே சொத்து தகராறில் சித்தியை வாலிபர் அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டார்.

உத்தமபாளையம்,

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை அடுத்துள்ள அனுமந்தன்பட்டி ரைஸ்மில் தெருவை சேர்ந்தவர் கருப்பையா. அவருடைய மனைவி லட்சுமி (வயது 56). லட்சுமியின் தம்பி நாகராஜ். இவரது மகள் மலர்கொடி (20). இவரும், அதே பகுதியை சேர்ந்த வடிவேல் (25) என்பவரும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். வடிவேலுக்கு, லட்சுமி சித்தி உறவு முறையாகும்.

இந்தநிலையில் லட்சுமி மற்றும் நாகராஜூக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் 20 சென்ட் நிலம் உள்ளது. இந்த சொத்தை வடிவேலுக்கு தெரியாமல் விற்பனை செய்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் வடிவேலுக்கும், சித்தி லட்சுமிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் இரவு லட்சுமியின் வீட்டுக்கு வடிவேல் வந்தார். அப்போது சொத்து தொடர்பாக இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து அவர்களை சமரசம் செய்தனர்.

இதையடுத்து வடிவேல் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் வடிவேல் அங்கு வந்தார். அப்போது வீட்டு வாசல் அருகே நின்று கொண்டிருந்த லட்சுமியை, வடிவேல் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். அதன்பிறகு வடிவேலு அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு வீரபாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் லட்சுமியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வடிவேலுவை தேடி வருகின்றனர்.

Next Story