மாவட்ட செய்திகள்

விழுப்புரத்தில் அமைச்சர், பா.ம.க. வேட்பாளரின் பிரசாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் - கல்வீச்சு நடந்ததால் பரபரப்பு + "||" + Minister, PMK Candidate Protest campaign Civilian struggle

விழுப்புரத்தில் அமைச்சர், பா.ம.க. வேட்பாளரின் பிரசாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் - கல்வீச்சு நடந்ததால் பரபரப்பு

விழுப்புரத்தில் அமைச்சர், பா.ம.க. வேட்பாளரின் பிரசாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் - கல்வீச்சு நடந்ததால் பரபரப்பு
விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் பா.ம.க. வேட்பாளரின் பிரசாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பிரசார குழுவினர் மீது கல்வீசப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்,

விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் வடிவேல் ராவணன் நேற்று காலை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வாக்கு சேகரிக்க விழுப்புரம் பெரியகாலனி ஜி.ஆர்.பி. தெரு பகுதிக்கு சென்றார்.

இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்றுதிரண்டு அமைச்சரும், பா.ம.க. வேட்பாளரும் வாக்கு சேகரிக்க வரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது அவர்கள் விழுப்புரம் அடுத்த தொடர்ந்தனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை.ரவிக்குமார் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் கல்வீசி தாக்கிய நபரை கைது செய்யாத போலீசாரை கண்டித்தும், தங்கள் பகுதிக்கு இதுவரை எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை எனக்கூறி கோஷங்களை எழுப்பினர். மேலும், அப்படியே வாக்கு சேகரிக்க வந்தாலும் தங்கள் பகுதியில் பா.ம.க. கொடியுடன் யாரும் வரக்கூடாது, வேட்பாளர் நடந்து சென்றுதான் வாக்கு சேகரிக்க வேண்டும் என்றனர்.

அதுமட்டுமின்றி வேட்பாளரின் பிரசார வாகனம் ஜி.ஆர்.பி. தெருவிற்குள் நுழையாமல் இருக்க பாகர்ஷா சாலையில் தள்ளுவண்டிகளை நிறுத்தி மறியல் செய்ய முயன்றனர். இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழ்நிலை நீடித்தது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் வீரமணி, ராபின்சன், ராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அதற்கு உடன்படாத மக்கள், அமைச்சர் மற்றும் பா.ம.க. வேட்பாளரின் பிரசாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து கோஷம் எழுப்பியவாறு அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே அமைச்சர் சி.வி.சண்முகமும், வேட்பாளரும் பிரசார வாகனத்தில் நின்றபடி ஜி.ஆர்.பி. தெரு பகுதியில் வாக்கு கேட்டு வந்தனர். இவர்களை பார்த்ததும் அப்பகுதி மக்கள் கண்டன கோஷம் எழுப்பியபடி வாக்கு சேகரிக்க விடாமல் தடுக்க முயன்றனர். அதையும் மீறி பிரசார வாகனமும் மற்றும் அவர்களுடன் மோட்டார் சைக்கிள்களில் வந்த கூட்டணி கட்சி தொண்டர்களும் வாக்கு கேட்டபடி உடன் சென்றனர். இவர்களை அப்பகுதி மக்கள் தடுத்தனர். உடனே அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு பொதுமக்களை தடுத்து நிறுத்தினர். அதன் பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைச்சரும், வேட்பாளரும் வாக்கு சேகரித்தபடி வாகனத்தில் சென்றனர்.

இதனிடையே ஆத்திரமடைந்த பொதுமக்கள் கூட்டத்தில் இருந்து யாரோ ஒருவர் பிரசார குழுவினர் மீது கல்வீசி விட்டு தப்பிஓடிவிட்டார். இதில் அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் நகரசபை கவுன்சிலர் ஒருவரின் கையில் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அவசர, அவசரமாக பிரசாரத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து சென்றனர்.

இந்த சம்பவத்தினால் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகம் வாசிக்கப்பட்டவை