டேங்கர் லாரியில் டீசல் திருடிய 11 பேர் பிடிபட்டனர் 22 ஆயிரம் லிட்டர் பறிமுதல்
டேங்கர் லாரியில் டீசல் திருடி வந்த 11 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 22 ஆயிரம் லிட்டர் டீசல் பறிமுதல் செய்யப்பட்டது.
தானே,
தானே மாவட்டம் பிவண்டியில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில் இருந்து டேங்கர் லாரி மூலம் டீசல் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த லாரியின் டேங்கரில், துளை போட்டு டீசல் திருட்டு போவதாக நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதனை தொடர்ந்து நிறுவன காவலாளிகள் சம்பவத்தன்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரி டேங்கரில், ஒருவர் துளை போட்டு டீசல் திருட முயன்றார். இதனை கண்ட காவலாளிகள் திருட்டு ஆசாமியை கையும் களவுமாக மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை நார்போலி போலீசில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் மேலும் 8 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், திருடிய டீசலை அவுரங்காபாத் மற்றும் சோலாப்பூரை சேர்ந்த பெட்ரோல் பங்க்கில் விற்று வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் 2 பெட்ரோல் பங்க் உரிமையாளர்களையும் பிடித்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 11 பேரிடம் இருந்து போலீசார் 22 ஆயிரம் லிட்டர் டீசலை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.14 லட்சத்து 96 ஆயிரம் ஆகும்.
Related Tags :
Next Story