செய்யாறில் குடிநீர் வழங்கக்கோரி காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


செய்யாறில் குடிநீர் வழங்கக்கோரி காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 16 April 2019 4:00 AM IST (Updated: 15 April 2019 9:09 PM IST)
t-max-icont-min-icon

செய்யாறில் குடிநீர் வழங்கக்கோரி காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செய்யாறு, 

செய்யாறை அடுத்து செய்யாற்றை வென்றான் என்ற கிராமம் உள்ளது. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் செய்யாறில் இருந்து ஆரணி செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த செய்யாறு தாசில்தார் மூர்த்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் மறியல் நடந்த இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், ‘‘எங்கள் பகுதியில் வெட்டப்பட்ட 2 ஆழ்துளை கிணறுகளின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. அந்த குடிநீரும் உப்பு தன்மையாக இருப்பதால் நாங்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறோம். கூட்டு குடிநீர் திட்டம் மூலம் செய்யாறு ஆற்றில் இருந்து தெள்ளாறு கிராமத்திற்கு குடிநீர் வழங்கப்படுகிறது. அந்த குடிநீரை எங்கள் பகுதிக்கு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் உறுதியளித்தார். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story